ஆரம்பிக்க முன்,
கடந்த 4 வருடங்களாக இந்த முகவரியில் IT CORNER தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான விடயங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதே வகையில் தொழில்நுட்ப செய்திகனை பகிர்கிற நுாற்றுக்கணக்கான தளங்கள் இருந்தாலும் முன்னர் நீங்களறியாத புதிய தகவல்களையும் ஆழமான பல நுட்பபதிவுகளையும் பகிர்வதால் இந்தவலைப்பதிவு தனித்துவம் பெறுவது நீங்களறிந்ததே, சளைக்காமல் இந்த 4 ஆண்டுகளையும் கடக்க உங்கள் போன்றவர்களின் ஆதரவுதான் உந்துசக்தி. Facebook, google+ போன்ற சமூக வலைத்தளங்களிலும் நீங்கள் தரும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்தும் விதவிதமாக இங்கே தகவல்களை பகிர்ந்தாலும் தொடர்வாசகர்களாகிய உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாவது முக்கியமாகையால், தகவல்தொழில்நுட்பம் சார்ந்து நீங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் பற்றி பின்னுாட்டங்களிலோ அல்லது சமூகவலைத்தளங்களிலோ பகிர்ந்துகொண்டால் இந்த பயணம் இன்னும் இனிதாகும்.
நன்றிகளோடு
இணையத்தில் சாதாரணமாக நாம் அறிந்த பொதுமைப்பாடான சமூக வலைத்தளங்களை தவிர்த்து தனித்துவமான சிறப்பம்சங்களோடு இருக்கின்ற வினோத தளங்களை பட்டியலிடுகின்ற முயற்சியின் இறுதிப்பாகமூடாக மீண்டும் இந்த மாதத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்ச்சி. இந்தப்பதிவிலும் மேலும் சில சமூக வலைத்தங்களை பார்க்கலாம்.
# Twitch
நீங்கள் வீடியோ விளையாட்டு பிரியராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த தளம் அறிமுகமாயிருக்கும். வீடியோ விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் தங்களின் விளையாட்டுக்களை நேரடியாக இங்கே ஒலிபரப்புகிறார்கள். மற்றவர்கள் கருத்து சொல்கிறார்கள். வீடியோ விளையாட்டையெல்லாம் எப்படி பார்ப்பது என நினைக்கிறீர்களா? இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக 2000-3000க்கிடையிலான பயனர்கள் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் Xbox, PlayStation போன்ற பிரபல நிறுவனத்தயாரிப்புக்கான ஆரம்ப வைபவங்கள் போன்றனவும் இங்கேதான் நடைபெறுகின்றன. நேரடிஒளிபரப்புகளை மேற்கொள்ளவென உள்ள Justintv தளத்தின் உப பிரிவுதான் இத்தளம்.
முகவரி: www.twitch.com
# PatientsLikeMe
இதுவும் கொஞ்சம் வித்தியாசமான சமூகவலைத்தளம், அதாவது தங்கள் வாழ்க்கையில் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களுக்கு ஆளாகி சமூதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறவர்களுக்கான தளமாகும். தங்கள் போன்ற ஏனையவர்களோடு தங்கள் உணர்வுகளை கருத்துக்களை பரிமாற வழிசெய்கிறது இந்த தளம். மேலும் குறிந்த நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மருந்துகளை எடுக்க இந்ததளம் உதவுகிறது. 2006முதல் இயங்கிவருகிறது.
முகவரி: http://www.patientslikeme.com/
# SocialVibe
உலகம் முழுவதும் இயங்கிவருகின்ற அறக்கட்டளை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்கின்றது இவ்வலைத்தளம். அதுமட்டுமல்லாமல் 4லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத்தொண்டர்கள் இங்கே இருக்கிறார்கள். தங்கள் செயற்பாடுகள் பற்றி இங்கே பகிர்கிறார்கள், அவசர உதவிகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். நீங்களும் இந்த கண்ணியமிக்க குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
முகவரி: socialvibe.com
# CafeMom
உலகிலுள்ள உறவுகளில் தாய்மை தனித்துவமானது, அவ்வாறான தாய்மார்களுக்கான தனியான சமூகவலைத்தளம்தான் CafeMom. தாய்மார்கள் தங்கள் போன்ற ஏனைய தாய்மார்களுடன் கருத்துக்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் தங்கள் செல்லக்குழந்தைகளின் குறும்புகளையும் காணொளிகளாக புகைப்படங்களாக பதிவேற்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய தளம். மேலும் இதன் சிறப்புக்களை தெரிந்து கொள்ள
முகவரி: Cafemom.com
# DailyStrength
இவ்வுலகில் நீண்டநாள் வாழ்க்கைக்காக நாம் எடுக்கின்ற முயற்சி அளப்பரியது. இவ்வாறு எமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உடல் உள ரீதியான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள சிறந்த சமூகவலைத்தளமாகும். இதுபற்றிய ஆலோசனைகளை வழங்குகின்ற நிபுணர்கள் இங்கே தங்கள் கருத்துக்களை பகிர்கிறார்கள்.
முகவரி: http://www.dailystrength.org/
# ShareTheMusic
இது முற்றிலுமான ஒரு இசைக்குழுமம், நீங்களும் இசை மீது தீவிர ஈடுபாடுடையவராக இருந்தால் நீங்கள் ரசிக்கின்ற இசையை ஏனைய நண்பர்களோடு பகிரவும் லட்சக்கணக்கான இசைக்கோப்புகளை கேட்கவும் வழி செய்கிறது இந்த இணையத்தளம். ஆனாலும் இதே சேவையை சற்று வித்தியாசமாக வழங்குகின்ற பல சமூகவலைத்தளங்கள் இருக்கின்றன. உதாரணமாக Audimated.com, Buzznet, Gogoyoko, Indaba Music, Last.fm, MOG, Playlist.com, ReverbNation.com, SoundCloud போன்றவற்றை கூறலாம்.
முகவரி: www.ShareTheMusic.com
பகிர்ந்துகொண்ட தளங்கள் தகவல்கள் அனைத்தும் பயனளித்திருக்கும் என்று நம்புகிறேன், மற்றுமொரு பதிவில் சந்திப்போம். உடனுக்குடனான தொழில்நுட்ப தகவல்களுக்கு பேஸ்புக் மற்றும் கூகிள் ப்ளஸ் போன்றவற்றில் பின்தொடருங்கள்.