தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப்பாதையில் இணையத்தின் கண்டுபிடிப்பு தகவல் தொழில்நுட்பத்தையே வேறொரு பரிணாமத்திற்கு எடுத்து சென்றது எனலாம். இந்த இணையம் பல்வேறு தரப்பினருக்கும் பலவாறாகவும் பயன்படுகின்ற போதிலும் இணையத்தோடு கைகுலுக்குகின்ற ஒரு தனிமனிதன் பெற்றுக்கொள்கின்ற மிகப்பெரிய வசதி தொடர்பாடல்தான். அதாவது ஆரம்பகாலத்தில் மனிதன் இணையமூடாக வந்த மின்னஞ்சல் வசதி மூலமாக தன் தொடர்பாடலை மேம்படுத்தி நட்புக்கள், உறவுகளை வலுப்படுத்தி கொண்டான். இவை முந்தைய கணினி தலைமுறையுடன் (4th Generation) கழிய, நாம் நுழைந்திருக்கும் இந்த கணினி தலைமுறையில் (5th Generation) சமூக வலைத்தளங்கள் என்ற புதிய கருவி தோற்றம் பெற்றதும் இன்று இவை சமூகத்தையே ஆட்டுவிக்கும் மிகப்பாரிய சக்தியாக உருவெடுத்திருப்பதும் கண்கூடு. இருந்தபடியே உலகின் பல்வேறு மூலைகளிலும் வாழும் எந்தவொரு தனிநபருடனும் இலகுவாக தொடர்புகொள்ள முடிவதும், தகவல்களை பரிமாற முடிவதும் இதன் சிறப்பு. சமூக வலைத்தளங்கள் (Social networking websitees) பற்றி பேசுகையில் அடுத்துவருவது இந்த சேவையை வழங்குகின்ற நிறுவனங்கள். Facebook, Twitter, Google+ போன்றன இவற்றிற்கான உதாரணங்கள்.
இந்த நிறுவனங்களும் அவற்றின் இணையத்தளங்களும் சாதரணமாக நமக்கு பரிட்சயமாகிப்போனவை. இவை பொதுமைப்பாடான (General) செயற்பாடுகளை கொண்டவை. ஆனால் இணையத்தில் நாமறியாத ஆயிரக்கணக்கான பல வினோத சமூகவலைத்தளங்கள் வித்தியாசமான தன்மைகளுடன் உலாவருகின்றன.
நாள்தோறும் Facebook, Twitter, Google+ என்று அலைகின்ற உங்கள் இணையநட்பு உலாவலை சுவாரஸ்யமாக்குவதற்கான, நான் சொன்ன இந்த வினோத சமூகவலைத்தளங்களின் தொகுப்புதான் இந்தபதிவு. நட்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
# Advogato
கணினித்துறைசார் செயல்நிரலாளர்களுக்கான (Software Developers) சமூக வலைத்தளமாகும். அதிலும் Open Source என அழைக்கப்படுகின்ற திறந்தமூல செய்நிரல்களை வடிவமைக்கின்றவர்கள் ஒன்றுகூடுகின்ற இணையத்தளம். ஆயிரக்கணக்கான கணினி செய்நிரல் வடிவமைப்பாளர்கள் தினமும் இங்கு தங்கள் தொழில்சார்ந்து பல விடயங்களை பகிர்கிறார்கள். தங்கள் மென்பொருள் படைப்புக்கள் பகிர்ந்துகொண்டு அவைபற்றிய கருத்துக்களையும் அறிந்து கொள்கிறார்கள். இந்த வலைத்தளம் 1999முதல் இயங்கிவருகிறது. கிட்டதட்ட 13,500க்கும் அதிகமான அங்கத்தவர்களுடன் இயங்குகிறது. நீங்களும் ஒரு செய்நிரல் வடிவமைப்பாளராக இருந்தால் உடனே இணைந்து கொள்ளுங்கள்.
முகவரி: http://www.advogato.org/
# deviantART
பெயரிலுள்ளது போன்றே சித்திரக்கலைஞர்களுக்கான சமூகவலைத்தளம் இது. இங்கே அங்கத்தவராக நமக்கு சித்திரம் கைவந்த கலையாக இருக்க வேண்டுமென்பதில்லை. சாதரணமாக நாம் பிரபல ஓவியர்களையும் அவர்களின் படைப்புகளையும் ரசித்திருப்போம், ஆனால் பல கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இங்கே பகிர்கிறார்கள். அது பற்றி விவாதிக்கிறார்கள். பல ஓவியப் போட்டிகளும் நடாத்தப்படுகின்றன. 22கோடிக்கும் அதிகமான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். 2000ம் ஆண்டு முதல் இந்த தளம் இயங்கிவருகிறது.
முகவரி: http://www.deviantart.com/
# italki.com
இதுவும் சற்று வித்தியாசமான சமூகவலைத்தளம்தான். புதிய புதிய மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவரா அப்படியானால் உங்களுக்கான தளம் இதுதான். 100க்கும் அதிகமான மொழி பேசுகிறவர்கள் மொழிகளை கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்து கொண்டும் இருக்கிறார்கள். மேலோட்டமாக உலாவினாலே (browse) பல சுவாரஸ்யமான மொழிகள், வார்த்தைகளை அறிந்துகொள்ளலாம். நம் தமிழ் இங்கு எந்தளவில் இருக்கிறதென்று நான் ஆராயவில்லை. யாராவது பயன்படுத்துகிறவர்கள் பின்னுாட்டங்களில் பகிருங்கள். நீங்களும் இன்றே தமிழ் வகுப்பு நடாத்த தொடங்கலாமே..
முகவரி: http://www.italki.com/
# WeeWorld
இணையம் எந்தளவு சுதந்திரமான ஊடகமோ அந்தளவுக்கு தனிமனித பாதுகாப்பும் சுதந்திரமும் குறைவான ஊடகமும் கூட. இதனாலேயே பிரபலமான சமூக வலைத்தளங்கள் 16வயதுக்கு குறைந்த Teenagersஐ அனுமதிப்பதில்லை. ஆனால் அவ்வாறான சிறுவர்கள் தங்கள் தனித்துவமான உலகை தங்களைப்போன்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள. இங்கு கணக்கு ஆரம்பிக்க வயதெல்லை 9 தொடக்கம் 17 இற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
முகவரி: http://www.weeworld.com/
# LibraryThing
புத்தக வாசிப்பு என்பது இன்று மிகவும் அருகிவிட்ட ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக பொழுதுபோக்கு. அவ்வாறான புத்தக பிரயர்களை ஒன்றுசேர்க்கின்றது இந்த இணையத்தளம். 18பில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் உண்டு. அடிப்படையில் இது Online Library அல்ல. நீங்கள் படிக்கின்ற புத்தகங்களை பற்றிய கருத்துக்களை் விமர்சனங்களையும் அந்த புத்தகத்திற்கான தரவிறக்க இணைப்புக்களையுமே இங்கு பகிரலாம்.
முகவரி: https://www.librarything.com/
# Cucumbertown
இது கொஞ்சம் ருசியான சமூகவலைத்தளம். சாப்பிட பிடிக்காதவர்கள் யார்? சாப்பாட்டு பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் சுவையான உணவுகளை தயார்செய்யும் chefsஇற்கான சமூகவலைத்தளம். பிரபல ஹோட்டல்களின் chefsகூட இங்கே இருக்கிறார்கள். சுவையான உணவு செய்முறைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இங்கு அங்கத்தவராகுவதற்கு நீங்கள் சமையல் வல்லுநராக இருக்க வேண்டுமென்பதில்லை, சாதாணமாக நாம் செய்கின்ற உணவுகளின் செய்முறைகளை கூட பகிரலாம். ஏனையவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் பெற்று கொள்ளலாம்.
முகவரி: http://www.cucumbertown.com/
ஆயிரக்கணக்கான வினோத சமூக வலைத்தளங்களில் 6 ஐ மட்டும் இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அடுத்த பாகத்தில் வேறு வினோதமான 6 தளங்களோடு சந்திப்போம்.
"நட்புக்கள் தொடரும்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக