9 செப்டம்பர், 2014

உங்கள் Android சாதனங்களின் Google Play Store இல் ஏற்படும் பிழைகளும் தீர்வுகளும்



கைத்தொலைபேசிகள் நவீனமயமாகிவிட்ட பின் தற்காலங்களில் கணினிக்கு இணையான சாதனமாக அவை மாறியிருக்கிறது. இது Smartphone எனப்படும் விஷேட பதம் கொண்டு இனங்காணப்படுகின்றது. இவ்வாறான Smartphone வகை கைபேசிகளுக்கான இயங்குதளங்கள் (Operating System) முக்கியமானவை. பல நிறுவனங்கள் விதம்விதமான வசதிகளுடன் இயங்குதளங்களை (Operating System) வழங்கினாலும் அனைவராலும் பாராட்டப்படுவது Android இயங்குதளம்தான். வெறுமனே கைத்தொலைபேசிகள் மட்டுமன்றி TabletPC, Watches, Computers போன்ற சாதனங்களும் இவற்றால் வலுப்படுத்தப்படுகிறது. 

இந்த Android சாதனங்களில் செயலிகளை நிறுவி பயன்படுத்துவதற்கு வசதியாக இருப்பது கூகிள் நிறுவனம் வழங்குகின்ற Google Play Store எனப்படும் சேவையகம். இங்கிருந்துதான் Android சாதனங்களுக்கான எந்தவொரு செயலியையும் (Applications) பெற்று பயன்படுத்த வேண்டும். அதே போன்று முன்னமே நிறுவிய செயலிகளை (Apps) இற்றைப்படுத்தவும் (Update) இங்குதான் செல்ல வேண்டும். ஆனாலும் இந்த வேலைகளை செய்கின்ற போது சில இலக்கங்களோடு செய்திகள் தோன்றும், மேலும் செயலிகளை நிறுவமுடியாமலோ, இற்றைப்படுத்த முடியாமலோ இருக்கும். திரும்ப திரும்ப முயற்சித்து சிலர் அப்படியே விட்டுவிடுவோம் அல்லது இலகுவாக Factory reset செய்துவிடுவோம். அப்படி செய்தும் சிலருக்கு பிரச்சினை தொடரும். இவ்வாறு தொல்லை தருகின்ற இந்த பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன? இதனை தீர்ப்பது எப்படி? 


இவ்வாறு ஏற்படுகின்ற இந்த பிழைகளை தீர்க்க ந்தவொரு தொழில்நுட்பவியலாளரையும் (Technician) நாட வேண்டியதில்லை, நீங்களாகவே உங்கள் சாதனத்தில் உள்ள Optionsஐ கொண்டே அவற்றை தீர்த்துவிடலாம்.

முக்கியமாக: இங்கே நான் பதிவிட்டிருக்கின்ற பிழைகளும் தீர்வுகளும் பொதுவான ஒரு Android பாவனையில் ஏற்படுபவை. பிழைச்செய்திகள் சாதனத்திற்கு சாதனம் வேறுபடலாம். இவைதவிர மேலதிகமாக ஏதேனும் பிழைச்செய்திகளை நீங்கள் எதிர்கொண்டால் பின்னுாட்டங்களில் குறிப்பிடுங்கள் தீர்வைத்தர முடியுமானவரை முயற்சிக்கிறேன்.

# Google Play - Error 491 / Google Play - Error 921 / Google Play - Error 413 / Google Play install error 961

பிரச்சினை:
உங்கள் Android சாதனத்தில் (Device) நிறுவியுள்ள செயலிகளை இற்றைப்படுத்தவோ அல்லது புதிய செயலிகளை நிறுவவோ முடியாமல் இருக்கும்.

தீர்வு:
Settings > Accounts இல் சென்று நீங்கள் Add செய்துள்ள Google கணக்கை நீக்குங்கள். பின் உங்கள் Deviceஐ Reboot செய்யுங்கள். (இதனை செய்ய Power buttonஐ அழுத்திப்பிடிக்க, தோன்றும் Menuஇல் Reboot தெரிவு செய்க) பின்பு மீண்டும் உங்கள் Google கணக்கை உள்நுழைக்கவும். பிறகு Settings > Applications > All applications சென்று அங்கு Google Services என்பதை திறங்கள். தோன்றும் Menuஇல் Clear Data என்பதை கொடுத்து பின் Force Stop என்பதை தெரிவு செய்க.

# Google Play - Error 498

பிரச்சினை:
Google Play Store இலிருந்து செயலிகளை தரவிறக்க/இற்றைப்படுத்த முயற்சிக்கும் போது அவை இடைநடுவில் தானாகவே நிறுத்தப்பட்டு (Interruption) இந்த செய்தி தோன்றும்.

தீர்வு:
இதற்கான காரணம் உங்கள் Android சாதனத்தின் Cache memory நிரம்பிவிட்டதுதான். முதலில் நீங்கள் அதிகம் பயன்படுத்தாத செயலிகள், விளையாட்டுக்கள், Files போன்றவற்றை நீக்கிவிடுங்கள். பின்பு உங்கள் Deviceஐ Recovery Modeஇல் Reboot செய்யுங்கள். (இங்கு Recovery Mode என்பது கணினிகளுக்கான Safe Modeபோல தொழிற்படும்) இதனை செய்ய Samsung Android சாதனங்களில் Volume Down, Power மற்றும் Home buttonsஐ ஒருசேர அழுத்திப்பிடியுங்கள் (Press & Hold). ஏனைய சாதனங்களில் Volume Downமற்றும் Power button. கீழுள்ளது போல தோன்றும் Recovery Mode windowஇல் wipe cache partition என்பதை தெரிவு செய்யுங்கள். பின் அதை உறுதிப்படுத்தினால் Cache clean செய்யப்பட்டு Reboot ஆகும். பின்னர் வழமைபோல Home Screenஐ அடைந்து செயலிகளை நிறுவலாம்.


# Google Play - Error 919

பிரச்சினை:
நீங்கள் Google Play Store இலிருந்து தரவிறக்கிய செயலி (App) முதல்முறை நன்றாக இயங்கும். ஆனால் பயன்படுத்த தொடங்கிய பின் செயலியை திறந்தால் இந்த பிழைச்செய்தி வரும்.

தீர்வு:
உங்கள் Android சாதனத்தில் செயலியை இயக்க போதிய இடம் இல்லையென்பதுதான் இந்த பிழைச்செய்திக்கான காரணம். இதனை தவிர்க்க நல்ல Cache memory cleaner மென்பொருள் கொண்டு அடிக்கடி Cache memory clean மற்றும் Memory boost செய்யுங்கள். Storageஇலுள்ள தேவையற்ற Filesஐ நீக்கிவிடுங்கள்.

இங்கே குறிப்பிட்ட பிரச்சினைகளும் தீர்வுகளும் பொதுவான ஒரு Android சாதனத்தில் Google Play Storeஐ பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள். முறையான பராமரிப்பு இன்மையே இதுபோன்ற சிக்கல்களுக்கு பொதுவான காரணம். இவைதவிர மேலதிக பிழைகளும் தோன்றலாம், அது உங்கள் Android Device Manufactureஐ பொறுத்து வேறுபடும். அவ்வாறானவற்றை பின்னுாட்டங்களில் குறிப்பிடுங்கள் தீர்வைத்தர முடியுமானவரை முயற்சிக்கிறேன். கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.   














20 ஜூலை, 2014

இணையத்தில் உலாவரும் வினோதமான் நட்பு வளையங்கள் (social websites) (பகுதி-02)


ஆரம்பிக்க முன், 
கடந்த 4 வருடங்களாக இந்த முகவரியில் IT CORNER தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான விடயங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதே வகையில் தொழில்நுட்ப செய்திகனை பகிர்கிற நுாற்றுக்கணக்கான தளங்கள் இருந்தாலும் முன்னர் நீங்களறியாத புதிய தகவல்களையும் ஆழமான பல நுட்பபதிவுகளையும் பகிர்வதால் இந்தவலைப்பதிவு தனித்துவம் பெறுவது நீங்களறிந்ததே, சளைக்காமல் இந்த 4 ஆண்டுகளையும் கடக்க உங்கள் போன்றவர்களின் ஆதரவுதான் உந்துசக்தி. Facebook, google+ போன்ற சமூக வலைத்தளங்களிலும் நீங்கள் தரும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்தும் விதவிதமாக இங்கே தகவல்களை பகிர்ந்தாலும் தொடர்வாசகர்களாகிய உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாவது முக்கியமாகையால், தகவல்தொழில்நுட்பம் சார்ந்து நீங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் பற்றி பின்னுாட்டங்களிலோ அல்லது சமூகவலைத்தளங்களிலோ பகிர்ந்துகொண்டால் இந்த பயணம் இன்னும் இனிதாகும். 
நன்றிகளோடு

இணையத்தில் சாதாரணமாக நாம் அறிந்த பொதுமைப்பாடான சமூக வலைத்தளங்களை தவிர்த்து தனித்துவமான சிறப்பம்சங்களோடு இருக்கின்ற வினோத தளங்களை பட்டியலிடுகின்ற முயற்சியின் இறுதிப்பாகமூடாக மீண்டும் இந்த மாதத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்ச்சி. இந்தப்பதிவிலும் மேலும் சில சமூக வலைத்தங்களை பார்க்கலாம்.

# Twitch

நீங்கள் வீடியோ விளையாட்டு பிரியராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த தளம் அறிமுகமாயிருக்கும். வீடியோ விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் தங்களின் விளையாட்டுக்களை நேரடியாக இங்கே ஒலிபரப்புகிறார்கள். மற்றவர்கள் கருத்து சொல்கிறார்கள். வீடியோ விளையாட்டையெல்லாம் எப்படி பார்ப்பது என நினைக்கிறீர்களா? இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு கணக்குக்கும் சராசரியாக 2000-3000க்கிடையிலான பயனர்கள் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் Xbox, PlayStation போன்ற பிரபல நிறுவனத்தயாரிப்புக்கான ஆரம்ப வைபவங்கள் போன்றனவும் இங்கேதான் நடைபெறுகின்றன. நேரடிஒளிபரப்புகளை மேற்கொள்ளவென உள்ள Justintv தளத்தின் உப பிரிவுதான் இத்தளம். 
முகவரி: www.twitch.com

# PatientsLikeMe

இதுவும் கொஞ்சம் வித்தியாசமான சமூகவலைத்தளம், அதாவது தங்கள் வாழ்க்கையில் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களுக்கு ஆளாகி சமூதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறவர்களுக்கான தளமாகும். தங்கள் போன்ற ஏனையவர்களோடு தங்கள் உணர்வுகளை கருத்துக்களை பரிமாற வழிசெய்கிறது இந்த தளம். மேலும் குறிந்த நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மருந்துகளை எடுக்க இந்ததளம் உதவுகிறது. 2006முதல் இயங்கிவருகிறது. 
முகவரி: http://www.patientslikeme.com/

# SocialVibe

உலகம் முழுவதும் இயங்கிவருகின்ற அறக்கட்டளை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்கின்றது இவ்வலைத்தளம். அதுமட்டுமல்லாமல் 4லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத்தொண்டர்கள் இங்கே இருக்கிறார்கள். தங்கள் செயற்பாடுகள் பற்றி இங்கே பகிர்கிறார்கள், அவசர உதவிகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். நீங்களும் இந்த கண்ணியமிக்க குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
முகவரி: socialvibe.com 

# CafeMom

உலகிலுள்ள உறவுகளில் தாய்மை தனித்துவமானது, அவ்வாறான தாய்மார்களுக்கான தனியான சமூகவலைத்தளம்தான் CafeMom. தாய்மார்கள் தங்கள் போன்ற ஏனைய தாய்மார்களுடன் கருத்துக்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் தங்கள் செல்லக்குழந்தைகளின் குறும்புகளையும் காணொளிகளாக புகைப்படங்களாக பதிவேற்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய தளம். மேலும் இதன் சிறப்புக்களை தெரிந்து கொள்ள 
முகவரி: Cafemom.com

# DailyStrength

இவ்வுலகில் நீண்டநாள் வாழ்க்கைக்காக நாம் எடுக்கின்ற முயற்சி அளப்பரியது. இவ்வாறு எமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உடல் உள ரீதியான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள சிறந்த சமூகவலைத்தளமாகும். இதுபற்றிய ஆலோசனைகளை வழங்குகின்ற நிபுணர்கள் இங்கே தங்கள் கருத்துக்களை பகிர்கிறார்கள். 
முகவரி: http://www.dailystrength.org/

# ShareTheMusic

இது முற்றிலுமான ஒரு இசைக்குழுமம், நீங்களும் இசை மீது தீவிர ஈடுபாடுடையவராக இருந்தால் நீங்கள் ரசிக்கின்ற இசையை ஏனைய நண்பர்களோடு பகிரவும் லட்சக்கணக்கான இசைக்கோப்புகளை கேட்கவும் வழி செய்கிறது இந்த இணையத்தளம். ஆனாலும் இதே சேவையை சற்று வித்தியாசமாக வழங்குகின்ற பல சமூகவலைத்தளங்கள் இருக்கின்றன. உதாரணமாக Audimated.com, Buzznet, Gogoyoko, Indaba Music, Last.fm, MOG, Playlist.com, ReverbNation.com, SoundCloud போன்றவற்றை கூறலாம். 
முகவரி: www.ShareTheMusic.com

பகிர்ந்துகொண்ட தளங்கள் தகவல்கள் அனைத்தும் பயனளித்திருக்கும் என்று நம்புகிறேன், மற்றுமொரு பதிவில் சந்திப்போம். உடனுக்குடனான தொழில்நுட்ப தகவல்களுக்கு பேஸ்புக் மற்றும் கூகிள் ப்ளஸ் போன்றவற்றில் பின்தொடருங்கள்.

13 ஜூலை, 2014

இணையத்தில் உலாவரும் வினோதமான் நட்பு வளையங்கள் (social websites) (பகுதி-01)


தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப்பாதையில் இணையத்தின் கண்டுபிடிப்பு தகவல் தொழில்நுட்பத்தையே வேறொரு பரிணாமத்திற்கு எடுத்து சென்றது எனலாம். இந்த இணையம் பல்வேறு தரப்பினருக்கும் பலவாறாகவும் பயன்படுகின்ற போதிலும் இணையத்தோடு கைகுலுக்குகின்ற ஒரு தனிமனிதன் பெற்றுக்கொள்கின்ற மிகப்பெரிய வசதி தொடர்பாடல்தான். அதாவது ஆரம்பகாலத்தில் மனிதன் இணையமூடாக வந்த மின்னஞ்சல் வசதி மூலமாக தன் தொடர்பாடலை மேம்படுத்தி நட்புக்கள், உறவுகளை வலுப்படுத்தி கொண்டான். இவை முந்தைய கணினி தலைமுறையுடன் (4th Generation) கழிய, நாம் நுழைந்திருக்கும் இந்த கணினி தலைமுறையில் (5th Generation) சமூக வலைத்தளங்கள் என்ற புதிய கருவி தோற்றம் பெற்றதும் இன்று இவை சமூகத்தையே ஆட்டுவிக்கும் மிகப்பாரிய சக்தியாக உருவெடுத்திருப்பதும் கண்கூடு. இருந்தபடியே உலகின் பல்வேறு மூலைகளிலும் வாழும் எந்தவொரு தனிநபருடனும் இலகுவாக தொடர்புகொள்ள முடிவதும், தகவல்களை பரிமாற முடிவதும் இதன் சிறப்பு. சமூக வலைத்தளங்கள் (Social networking websitees) பற்றி பேசுகையில் அடுத்துவருவது இந்த சேவையை வழங்குகின்ற நிறுவனங்கள். Facebook, Twitter, Google+ போன்றன இவற்றிற்கான உதாரணங்கள்.


இந்த நிறுவனங்களும் அவற்றின் இணையத்தளங்களும் சாதரணமாக நமக்கு பரிட்சயமாகிப்போனவை. இவை பொதுமைப்பாடான (General) செயற்பாடுகளை கொண்டவை. ஆனால் இணையத்தில் நாமறியாத ஆயிரக்கணக்கான பல வினோத சமூகவலைத்தளங்கள் வித்தியாசமான தன்மைகளுடன் உலாவருகின்றன. 

நாள்தோறும் Facebook, Twitter, Google+ என்று அலைகின்ற உங்கள் இணையநட்பு உலாவலை சுவாரஸ்யமாக்குவதற்கான, நான் சொன்ன இந்த வினோத சமூகவலைத்தளங்களின் தொகுப்புதான் இந்தபதிவு. நட்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

# Advogato


கணினித்துறைசார் செயல்நிரலாளர்களுக்கான (Software Developers) சமூக வலைத்தளமாகும். அதிலும் Open Source என அழைக்கப்படுகின்ற திறந்தமூல செய்நிரல்களை வடிவமைக்கின்றவர்கள் ஒன்றுகூடுகின்ற இணையத்தளம். ஆயிரக்கணக்கான கணினி செய்நிரல் வடிவமைப்பாளர்கள் தினமும் இங்கு தங்கள் தொழில்சார்ந்து பல விடயங்களை பகிர்கிறார்கள். தங்கள் மென்பொருள் படைப்புக்கள் பகிர்ந்துகொண்டு அவைபற்றிய கருத்துக்களையும் அறிந்து கொள்கிறார்கள். இந்த வலைத்தளம் 1999முதல் இயங்கிவருகிறது. கிட்டதட்ட 13,500க்கும் அதிகமான அங்கத்தவர்களுடன் இயங்குகிறது. நீங்களும் ஒரு செய்நிரல் வடிவமைப்பாளராக இருந்தால் உடனே இணைந்து கொள்ளுங்கள்.
முகவரி: http://www.advogato.org/

# deviantART

பெயரிலுள்ளது போன்றே சித்திரக்கலைஞர்களுக்கான சமூகவலைத்தளம் இது. இங்கே அங்கத்தவராக நமக்கு சித்திரம் கைவந்த கலையாக இருக்க வேண்டுமென்பதில்லை. சாதரணமாக நாம் பிரபல ஓவியர்களையும் அவர்களின் படைப்புகளையும் ரசித்திருப்போம், ஆனால் பல கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இங்கே பகிர்கிறார்கள். அது பற்றி விவாதிக்கிறார்கள். பல ஓவியப் போட்டிகளும் நடாத்தப்படுகின்றன. 22கோடிக்கும் அதிகமான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். 2000ம் ஆண்டு முதல் இந்த தளம் இயங்கிவருகிறது.
முகவரி: http://www.deviantart.com/

# italki.com

இதுவும் சற்று வித்தியாசமான சமூகவலைத்தளம்தான். புதிய புதிய மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவரா அப்படியானால் உங்களுக்கான தளம் இதுதான். 100க்கும் அதிகமான மொழி பேசுகிறவர்கள் மொழிகளை கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்து கொண்டும் இருக்கிறார்கள். மேலோட்டமாக உலாவினாலே (browse) பல சுவாரஸ்யமான மொழிகள், வார்த்தைகளை அறிந்துகொள்ளலாம். நம் தமிழ் இங்கு எந்தளவில் இருக்கிறதென்று நான் ஆராயவில்லை. யாராவது பயன்படுத்துகிறவர்கள் பின்னுாட்டங்களில் பகிருங்கள். நீங்களும் இன்றே தமிழ் வகுப்பு நடாத்த தொடங்கலாமே..
முகவரி: http://www.italki.com/

# WeeWorld

இணையம் எந்தளவு சுதந்திரமான ஊடகமோ அந்தளவுக்கு தனிமனித பாதுகாப்பும் சுதந்திரமும் குறைவான ஊடகமும் கூட. இதனாலேயே பிரபலமான சமூக வலைத்தளங்கள் 16வயதுக்கு குறைந்த Teenagersஐ அனுமதிப்பதில்லை. ஆனால் அவ்வாறான சிறுவர்கள் தங்கள் தனித்துவமான உலகை தங்களைப்போன்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள. இங்கு கணக்கு ஆரம்பிக்க வயதெல்லை 9 தொடக்கம் 17 இற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
முகவரி: http://www.weeworld.com/

# LibraryThing

புத்தக வாசிப்பு என்பது இன்று மிகவும் அருகிவிட்ட ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக பொழுதுபோக்கு. அவ்வாறான புத்தக பிரயர்களை ஒன்றுசேர்க்கின்றது இந்த இணையத்தளம். 18பில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் உண்டு. அடிப்படையில் இது Online Library அல்ல. நீங்கள் படிக்கின்ற புத்தகங்களை பற்றிய கருத்துக்களை் விமர்சனங்களையும் அந்த புத்தகத்திற்கான தரவிறக்க இணைப்புக்களையுமே இங்கு பகிரலாம்.
முகவரி: https://www.librarything.com/

# Cucumbertown

இது கொஞ்சம் ருசியான சமூகவலைத்தளம். சாப்பிட பிடிக்காதவர்கள் யார்? சாப்பாட்டு பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் சுவையான உணவுகளை தயார்செய்யும் chefsஇற்கான சமூகவலைத்தளம். பிரபல ஹோட்டல்களின் chefsகூட இங்கே இருக்கிறார்கள். சுவையான உணவு செய்முறைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இங்கு அங்கத்தவராகுவதற்கு நீங்கள் சமையல் வல்லுநராக இருக்க வேண்டுமென்பதில்லை, சாதாணமாக நாம் செய்கின்ற உணவுகளின் செய்முறைகளை கூட பகிரலாம். ஏனையவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் பெற்று கொள்ளலாம்.
முகவரி: http://www.cucumbertown.com/

ஆயிரக்கணக்கான வினோத சமூக வலைத்தளங்களில் 6 ஐ மட்டும் இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அடுத்த பாகத்தில் வேறு வினோதமான 6 தளங்களோடு சந்திப்போம்.

"நட்புக்கள் தொடரும்"

16 ஜூன், 2014

உங்களின் USB Flash Drive இலிருந்தே இயங்குமுறைமையை நிறுவ என்ன செய்ய வேண்டும்?


கணிணி என்ற சாதனத்தை பொறுத்தவரையில் அது வெறுமனே வன்பொருள்களை மட்டும் கொண்டு இயங்குகின்ற சாதனமன்று, மாறாக அவ்வன்பொருள்களை இயக்குகின்ற பொருத்தமான மென்பொருள்களும் இருந்தாலே ஒரு கணினியானது சரியான முறையில் இயங்கும். இதில் இயங்குமுறைமை எனப்படுகின்ற Operating System ஆனதுதான் கணினியின் செய்ற்பாடுகளுக்கு உயிர்தருவது. எனவே இந்த இயங்குமுறைமையானது காலத்துக்கு காலம் அபிவிருத்திசெய்யப்பட்டு புதிய பதிப்புகளில் வெளிவருகிறது. இதை பல நிறுவனங்கள் வழங்கினாலும், எத்தனை பதிப்புகள் புதிதுபுதிதாக வந்தாலும் ஒரு வாரத்திற்குள்ளேயே Crack வந்துவிடும் என்பதால் நம்மில் பலர் பயன்படுத்துவது Microsoft இன் Windows வரிசையில் வருகின்ற மென்பொருள்களைதான். இப்படியிருக்கையில் சாதாரணமாக ஒரு இயங்குமுறைமையை நிறுவுவதென்பது அதற்கான Boot-able CD/DVD மூலமாக செய்வதாகும்.

ஆனால் நாம் சாதாரணமாக தரவு பரிமாற்றத்திற்கு பயனபடுத்துகின்ற USB Flash Driveஇல் வைத்து நிறுவ முடியுமா? என்றால் இல்லை. ஆனால் USB Driveஇல் சில மாற்றங்களை மேற்கொண்டு இதை சாத்தியமாக்கலாம். இதனை எப்படி செய்வதென்பதை அறிய முன் சிறிய விளக்கம்.

நீங்கள் இதனை செய்ய வேண்டுமென்றால் Windows 7 இலிருந்து Windows 8 இற்கு உங்கள் கணினியை மாற்றும்போதோ அல்லது Windows 7 ஐ அழித்து மீண்டும் Windows 7 நிறுவும் போதோ மட்டுமே இது சாத்தியமாகும். ஏனென்றால் USB Driveஐ Boot-able ஆக Windows 7 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புள்ள கணினிகளில் மட்டுமே செய்யலாம். நீங்கள் தற்போது WindowsXP பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனை Windows 7ற்கு USB Drive மூலம் Upgrade செய்ய வேண்டுமென்றால் Windows 7 உள்ள வேறொரு கணினியில் வைத்து அதனை Boot-able ஆக மாற்றி பின் பயன்படுத்தவேண்டும்.

இனி சாதாரண USB Flash Driveஐ எவ்வாறு Bootable ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

1. நீங்கள் Boot-able ஆக மாற்றவேண்டிய USB Driveஐ PlugIn செய்யுங்கள்.

2. உங்கள் Windows7/8/8.1 நிறுவப்பட்ட கணினியில் Run windowஐ திறந்து கொள்ளுங்கள். (Press WinKey+R or Start->Run)

3. அதில் CMD என Type செய்து Command Prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.

4. பின் Diskpart என தட்டச்சு செய்து Enter அழுத்துங்கள். Confirmation windowஇல் Yes கொடுத்தபின் புதிதான ஒரு DOS Windowஐ காண்பீர்கள், அது கீழுள்ளது போல உள்ளதை உறுதி செய்துகொள்ளுங்கள்.



5. பின் அதில் List disk என தட்டச்சு செய்து Enter அழுத்தும் போது உங்கள் கணினியின் Storage diskகளை அது பட்டியல் படுத்தும். இதில் நீங்கள் மாற்றவேண்டிய device இருப்பதை உறுதிப்படுத்துவதோடு அதன் Disk numberஐ கவனத்தில் கொள்க.

6. பின் Selectdisknumberஐ தட்டச்சு செய்க. நான் இங்கே disk2ஐ பயன்படுத்துவதால் Select disk 2 என தட்டச்சு செய்கிறேன். பின் disk2 is now selected disk என தோன்றும்.

7. Drive ஐ format செய்யவேண்டுமென்பதால் clean என தட்டச்சு செய்து enter செய்க.

8. பின் createpartitionprimary என தட்டச்சு செய்து enter செய்க.

9. பின்பு formatFS=FAT32quick என தட்டச்சு செய்து enter செய்க.

9. இறுதியாக active என தட்டச்சு செய்து enter செய்க. பின் DOS windowஐ close செய்க.

இப்போது உங்கள் ட்ரைவ் Boot-ableஆக மாற்றப்பட்டுவிட்டது. இனி உங்களிடமுள்ள windows7/8/8.1 DVDயிலுள்ளதை அப்படியே copy செய்து நீங்கள் bootable ஆக மாற்றிய USB Driveஇல் Paste செய்யுங்கள் பின்னர் வழமைபோல நிறுவவும். BIOS Menuஇல் Boot-device ஆக USBஜ set செய்க. 

* செய்முறைகளில் ஏற்படுகின்ற தவறுகள் உங்கள் USB Driveஜ பாதிக்ககூடும். எனவே DOS Windowஜ அவதானமாக கையாளவும்.
* DOS இல் case sensitive இல்லை.
*  என்பது வார்த்தைகளுக்கிடையிலான இடைவெளியை குறிக்கும், இது கட்டாயமானது.
* இந்த செயற்பாட்டிற்காக நீங்கள் பயன்படுத்துகின்ற USB Device ஆனது கட்டாயமாக 4GB அல்லது அதைவிட   அதிகமான கொள்ளளவை கொண்டிருக்க வேண்டும்.  

கருத்துக்களையும் விமர்சனங்களையும் மறக்காமல் பகிருங்கள். மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

2 ஏப்ரல், 2014

பேஸ்புக் ப்ரைவசி (Privacy) சில ஆலாசனைகளும் வழிகாட்டல்களும்


மனிதகுல வரலாற்றில் கணினி, இணையம் இவை இரண்டினதும் கண்டுபிடிப்பு தகவல் தொடர்பாடலை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித இனத்தையுமே பலமடங்கு முன்னேற்றியிருக்கிறது. சில சமயங்களில் அவை முறையாக பயன்படுத்தப்பட தவறுகிற போது சமூகத்தில் எதிர்விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன. அதிலும் எமது நாடு போன்ற கீழைத்தேயங்களில் எவ்வளவுதான் படிப்பறிவு உயர்ந்திருந்தாலும் இவ்வாறு தொழில்நுட்பம், கணினி, இணையம் என்று வருகின்ற போது 2/4 பகுதியினர் இன்றுவரை தெளிவற்ற/முறையற்ற பயன்பாட்டையே கொண்டிருக்கின்றனர். இங்கு நான் குறிப்பிடுவது புதிய தொழில்நுட்பங்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிகிறது என்ற உங்கள அறிவு மட்டத்தை அல்ல. ஒருவருக்கு கணினியில் தட்டச்சு செய்ய மட்டும்தான் தெரியும் என்றால் அதில் எந்த தவறுமில்லை. ஆனால் தெரிந்த அந்த விடயத்தை அவர் எந்தளவு தனக்கும் பிறர்க்கும் நன்மையுள்ளவாறு பயன்படுத்துகிறார் என்பதில் இருக்கிறது அவருடையதும் தொழில்நுட்பத்துடையதுமான வெற்றி. 



இன்றைய வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினர் சிறப்பானவர்கள், திறமைசாலிகள் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல, இவற்றோடு தொழில்நுட்பம் என்ற பாரிய சக்தியும் அவர்களிடம் இருக்கிறது. இது எங்கள் முன்னோர்களின் உழைப்பால் விளைந்தவை, இவை எங்களை வளப்படுத்தவும் எமக்கு பின் வருகிறவர்களை வழிகாட்டவும்தான் பயன்படவேண்டுமே தவிர எங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள அல்ல. இனி 'பேஸ்புக்', இந்தச்சொல்லை தெரியாத இளையவர்கள் மட்டுமல்ல யாருமே இல்லை என்றளவுக்கு இது பிரபலம். சாதாரண இணையதளமாக உருவாகி இன்று மாபெரும் இணைய ஊடகமாக (cyber media) வளர்ந்திருக்கிறது. நாமனைவரும் இதை ஒவ்வொருவிதமாக பயன்படுத்துகிறோம். ஆனால் எங்களில் எத்தனை பேர் அதை சரியான முறையில் அதிலுள்ள Optionகளை சரியாக பயன்படுத்துகிறோம் என்றால் குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் பேஸ்புக்கில் உள்ள Tag என்ற வசதி மற்றவர்களுக்கு புகைப்படங்களை அனுப்புவதற்க்குதான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அப்படியல்ல. நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த வேண்டுமா? இல்லலையா, எப்படி கணக்கு திறப்பது?, ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது எப்படி? என்று இங்கு சொல்லமுடியாது. ஆனால் எங்கள் பேஸ்புக் பாவனைக்கு சவாலாயிருக்கின்ற இநத Privacy பற்றி சொல்லித்தரலாம். அப்படியாவது இலங்கையில் கடந்த சில வாரங்களில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களையும், இலங்கையில் முற்றாக பேஸ்புக் தளத்தை தடைசெய்ய வேண்டும் என்ற கோஷத்தையும் தவிர்க்கலாம் அல்லவா? 

பேஸ்புக் இன்று இரண்டு பிரதான நோக்கத்திற்காக பாவிக்கப்படுகிறது.
  1. சாதாரணமாக தனிநபரொருவர் தனது நண்பர்கள் உறவுகளோடு உறவாடவும் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துதல்.
  2. ஒரு நிறுவனமோ/அமைப்பொன்றோ தங்களது நடவடிக்கைகள் விளம்பரப்படுத்தல்கள் மற்றும் பாவனையாளர்களுடனான தொடர்புகளை மேற்கொள்ளவும் பயன்படுத்துதல்.  
இதன் மூலமாக வெறுமனே நட்பு நோக்கத்திற்குரியவர்கள் மட்டும் வலம்வருமிடமென்று பேஸ்புக்கினை எண்ணிக்கொள்ளாதீர்கள். எனவே நீங்கள் பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய தகவல்களை பகிரும் ஒவ்வொருமுறையும் இருமுறை சிந்தியுங்கள். இதில் எதுவும் கட்டாயமில்லை. பரிந்துரைப்பு மட்டுமே.



பேஸ்புக்கில் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

இதனை பேஸ்புக் Privacy Settings என்கிறார்கள். நீங்கள் பேஸ்புக் இல் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் யார் யார் பார்க்க வேண்டும் என்று ஒழுங்குபடுத்துகின்ற பகுதி. இதில் கீழுள்ளது போல 3 பிரதான வகை உண்டு. அதாவது 


  • Only Me, இந்த தெரிவினை கொடுத்தால் குறித்த தகவலை நீங்கள் மட்டுமே காண முடியும்.
  • Friends Only, உங்கள் நண்பர்களோடு மட்டும் தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்த வசதி.
  • Everyone./Public. பேஸ்புக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இணையத்தில் உலாவருகிறவர்களும் காண கூடியவகையில் அதாவது பேஸ்புக்கில் கணக்கு இல்லாத ஒருவராலும் இதனை காணமுடியும்.

மிகவும் கலைக்குரிய விடயமென்னவெனில் Defaultஆக இந்த வசதி Public/Friends Only என்பதில் இருக்கும். தகவல்களை பகிர்வதிலும் புகைப்படங்களை பதிவேற்றுவதில் பலருக்கும் இருக்கின்ற வேகம் அதில் உள்ள இந்த Privacy settings எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பதில் இருப்பதில்லை. எனவே சாதாரண நிலைத்தகவல்கள் தொடங்கி புகைப்படங்கள், Profile Details போன்றவற்றை யார்யாருடன் பகிர வேண்டும் என சிந்தித்து பகிருங்கள். கூடியவரை கணினியிலிருந்து புகைப்படங்களை தரவேற்றுங்கள். நேரடியாக Mobile, Tablet போன்ற சாதனங்களில் இருந்து தரவேற்றுவதை தவர்க்கவும். அதே போன்று இப்போதெல்லாம் Smartphone யுகம். இவற்றில் உள்ள Synchronization என்ற வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். இணைய இணைப்பு இருந்தால் உங்களை அறியாமலே Galleryஇல் உள்ளவற்றை அவை பேஸ்புக் போன்ற தளங்களுக்கு ஏற்றிவிடும். எனவே உங்கள் தேவைக்கேற்ப Sync settingsஐ மாற்றிக்கொள்ளுங்கள். 

அடுத்து உங்கள் நண்பர்களை நிர்வகிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தனிப்பட்ட கணக்கில் ஆகக்கூடியது 5000 நண்பர்களை இணைத்து கொள்ளலாம். இதனை இன்னும் இலகுவாக்குவதற்காக பேஸ்புக் Friend List என்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. அதாவது உங்கள் வகுப்பு நண்பர்கள், வேலைத்தள நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் இப்படியாக இன்னும் பல பிரிவுகளில் நண்பர்களை பிரித்துவைத்துக் கொள்ள முடிவதுடன் மேற்சொன்ன Privacy Settings போன்று தேவைப்படும் போது தகவல்களை குறிப்பிட்ட ஒரு Listஇல் உள்ளவர்களோடு மட்டும் பகிரவும் முடியும்.

இவை போன்ற இன்னும் பல வசதிகள் மூலம் எமது Privacyஐ பாதுகாக்க முடியும். இனி வருகின்ற உங்கள் சமூக வலைத்தள உலாவல் அனுபவங்கள் உங்களுக்கும் சமூகத்திற்கும் பயன்தரட்டும்.

20 பிப்ரவரி, 2014

இணையத்தில் இசையோடு கதைபேச ஒரு பன்முக இணையத்தளம்


இணையம் மற்றும் அதனோடிணைந்த ஏனைய தொழில்நுட்பங்கள் இவை இன்றி கற்பனை செய்ய முடியாத ஒரு வாழ்வியலில், இவையெல்லாவற்றையும் பலவாறான தேவைகளுக்கும் பயன்படுத்தி கொண்டிருக்கின்ற போது அதனை இன்னும் கொஞ்சம் வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்கதாக்கவென ஒரு முயற்சி, ஆம் இணையத்தில் உலா வருகின்ற நம்மில் பலர் அறியாத அல்லது அறிந்தும் அதுபற்றி முழுதாக தெரிந்திருக்காத ஒரு இணையத்தளம் அதன் சேவைகள மற்றும் பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்யும் பதிவு. இணையத்தில் உலாவருகின்ற உங்களுக்கு சமூக வலைத்தளங்கள் (Social Networks) பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் நினைப்பது மாதிரி ட்விட்டர், பேஸ்புக் மட்டும் இந்த வகைக்குள் அடங்கவில்லை மாறாக இன்னும் நம்மில் பலர் அறியாத வினோத சமூக வலைத்தளங்களும் உள்ளன.
அவ்வாறான ஒரு தளம்தான் SoundCloud.



பொதுவாக சமூகவலைத்தளங்களென்றாலே நண்பர்களை சேர்த்து கொள்ள, தகவல்களை பரிமாற என இருக்கின்ற போது இந்த தளம் பெயருக்கேற்றாற்போல ஒலிகளை (அதாவது ஒலித்துணுக்குகளை அது இசையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை ஒருவரின் பேச்சாக கூட இருக்கலாம்) பல நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளவும் அதன் மூலமாக நட்புவளையங்களை உருவாக்கி கொள்ளவும் வழிசெய்கிறது. வெளிப்படையாக இது இப்படி இருந்தாலும் இந்த தளத்தை வேறுபல தேவைகளுக்கும் பயன்படுத்தமுடிதல் தான் இதன் சிறப்பு. 

அதாவது இதனை நாங்கள் எங்களுடைய ஒலிப்கோப்புகளை சேமித்து வைக்ககூடிய தொடரறா சேமிப்பகமாகவும் பயன்படுத்தலாம். அது போல நீங்கள் சிறந்த குரல்வளம், பேச்சாற்றல் உள்ளவரெனில் உங்கள் VoiceBlog ஆகவும் இதை பயன்படுத்தலாம். அது போல உலகெங்குமுள்ள பிரபல வானொலிகள் தங்கள் Podcast இனை கூட இங்கே பகிர்கிறார்கள். 

* இலங்கையின் சூரியன்FM வானொலியின் நிகழ்சி பகிர்வு (மாதிரி இணைப்பு)

நீங்கள் ஒரு வலைத்தள நிர்வாகியாக இருந்தால் உங்கள் தளத்தில் ஒலியை இணைக்கின்ற தேவை வருகின்ற போது Embeded Widjet வசதியையும் (மேலுள்ளது போல) இது தருகிறது. அதுமட்டுமன்றி பல இளம் கலைஞர்கள் தங்கள் இசை படைப்புக்களை இங்கே பகிர்ந்துகொள்வதனூடாக அவர்களின் முயற்சிக்கான சிறந்த அங்கீகாரத்தை பெறுவதுடன் புகழடையவும் வழிவகுக்கிறது. iOS, Android, Windows போன்ற மொபைல் இயங்குமுறைமைகளுக்கும் இது உள்ளது. ஆகவே பயன்படுத்த இன்னும் எளிதானது. இவ்வாறு பல வசதிகள் தருகின்ற இந்த தளத்தை பயன்படுத்தி பாருங்கள் அல்லது ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். 

இணைய முகவரி: www.soundcloud.com

25 ஜனவரி, 2014

நீங்களே உருவாக்கலாம் - ஒரு எளிய RAM Cleaner மென்பொருள்




2014ம் வருடம் பிறந்து 25வது நாளில்தான் இவ்வருடத்தின் முதல் பதிவு எழுத வேண்டும் என்ற சிந்தனை வந்தது. எனவே வேலைப்பளு, நேரப்பற்றாக்குறை இவற்றுக்கிடையில் சில மணிநேரங்களை கண்டுபிடித்து இப்பதிவை தயாரித்து தட்டச்சு செய்து பகிர்கிறேன். இதுவும் ஒரு Computer Trick வகையை சார்ந்த பதிவு/விடயம்தான். அதாவது நாம் கணினி என்ற சாதனத்தை பலவற்றுக்கும் பலவாறாகவும் பயன்படுத்துகிறோம் என்பது தெரியும். அதற்கேற்றால் போல விதம்விதமான மென்பொருள்களையும் உபயோகிக்கிறோம். 

அதே போன்று சரியான கால இடைவெளியில் கணினி பராமரிக்கப்பட்டால் மட்டுமே அதன் இயக்கம், வருவிளைவு ஆகியன உச்சமாக இருக்கும் என்பதும் தெரியும். இங்கே கணினி பராமரிப்பில் பல வகைகள் இருக்கின்றன. அதிலொன்றுதான் உங்களுடைய கணினியின் முதன்மை நினைவகமான RAM இனை சுத்தம் செய்வது (பௌதீக ரீதியாக அல்ல). இதற்காக பல மென்பொருள்கள் இலவசமாகவும் பணம் செலுத்தி பெற வேண்டியவையாகவும் கிடைக்கின்றன. பலருக்கு அதில் எது சிறந்தது? என்கின்ற பிரச்சினை வேறு. 

ஆனால் எங்களுடைய கணினியின் Notepad மென்பொருளைக் கொண்டே அதனை செய்து முடித்துவிடலாம். பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

Step 01: Notepad ஐ திறந்து பின்வருமாறு தட்டச்சு செய்யுங்கள். 
                      
                                                                   "      FreeMem=Space(10240000000)     "

* இங்கு 1024 என்று குறிக்கப்பட்டது உங்களுடைய RAM இன் கொள்ளளவு ஆகும். நீங்கள் 512MB கொள்ளளவு உள்ள RAM ஐ பாவிப்பவரானால் மேலேயுள்ள Code ஐ 1024 இற்கு பதிலாக 512 என மாற்றுக.

Step 02: பின்னர் அந்த File ஐ Cleaner.vbs என்ற பெயரில் எங்குவேண்டுமானாலும் சேமியுங்கள். (Desktop ஆக இருப்பது நல்லது.)

Step 03: நீங்கள் Save செய்த இடத்தில் தோன்றுகின்ற Icon ஐ இரட்டை கிளிக் செய்து Run பண்ணினால் உங்கள் RAM சுத்தம் செய்யப்பட்டுவிடும். 

கருத்துக்களை பின்னூட்டங்காக பகிருங்கள்.

Share With your friends