4 ஜனவரி, 2012

என் பதிவுலகில் பின்நோக்கி ஒரு பயணம் போகிறேன்...


ஒரு மாதிரியாக பலத்த எதிர்பார்ப்புகளோடு அனைவரும் எதிர்பார்த்திருந்த 2012ம் வருடம் பிறந்து விட்டது. எல்லா கொண்டாட்டங்களும் முடிந்து இயல்பான இயந்திர வாழ்க்கைக்கு எல்லோருமே திரும்பியிருக்கின்ற நேரம், என்னுடைய பதிவுகளும் வழமை போலவே இநத வருடமும் தொடர்கின்றன. இந்தப் பதிவின் தலைப்பு பலருக்கு ஆச்சர்யமளித்திருக்கலாம், ஏனெனில் இந்த வலைப்பதிவில் தொழில்நுட்பம் தவிர்ந்து நான் எழுதுகின்ற முதலாவது பதிவு இது. சுயபுராணம் பலருக்கு பிடிக்காத விடயம், இந்தப் பதிவு முழுக்க முழுக்க அப்படிப்பட்டது என்பதால் அவ்வாறானவர்கள் இத்தோடு நிறுத்தி கொண்டால் நன்றாயிருக்கும்.


நேற்றுத்தான் பதிவெழுத ஆரம்பித்தது மாதிரி இருக்கிறது, அதற்க்குள் முழுதாக 2 வருடங்கள் கடந்து விட்டன. தேடி தேடி செதுக்கி 105 பதிவுகளுக்கு மேல் மொத்தமாக இங்கே எழுதியிருக்கிறேன். காலம் எவ்வளவு வேகமாக நகருகிறது. இரண்டு வருடங்களுக்கு முதலில் ஒரு சஞ்சிகையில் வலைப்பதிவுகள் (Blogs) பற்றி படித்தது ஞாபகம். Blogger.com ஐ முதலில் தரிசித்தது நான் பாடசாலையில் சாதாரணதரம் படித்த போது என நினைக்கிறேன். அப்போது இருந்த Blogger தளம் இப்போது பல மடங்கு மாறியிருக்கிறது. ஆர்வக் கோளாறில் ஒரு கணக்கை ஆரம்பித்து உள்ளே வந்துவிட்டேன். ஏற்கனவே Gmail கணக்கு இருந்ததால் அது சிரமமாக இருக்கவில்லை. ஒருவாறாக முட்டிமோதி Blogger இன் அடிப்படை விடயங்களை தெரிந்து கொண்டாயிற்று.

பதிவு எழுத வேண்டும்.. எதைப் பற்றி எழுதுவது?... எவ்வாறு எழுதுவது?.. நாம் எழுதி மற்றவர்கள் வாசிப்பார்களா?.. அந்த நேரம் எனக்கு ஆங்கிலம் கூட சரியாக வராதே. அப்போதுதான் ஒரு கணினி சஞ்சிகையை படித்து தமிழை இணையத்தில் தட்டச்சு செய்வது பற்றி அறிந்து கொண்டேன் (என்னுடைய நேரம் அதோடு அந்த சஞ்சிகை வெளிவருவதையே நிறுத்தி விட்டார்கள்). ஒருவாறாக தமிழ் யுனிக்கோட் (Unicode) தட்டச்சுப் பழகி பதிவெழுத ஆரம்பித்தேன். "குட்டிக் குட்டிக் குறிப்புக்கள்" இதுதான் நான் முதலில் எழுதிய
பதிவு. எழுதினேன் என்பதை விட எழுத பழகினேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இப் பதிவை Publish செய்ததும் எனக்கு தெரிந்து 1 மாதம் வரை நானும் என்னுடைய சில நண்பர்களும் (அதுவும் நான் வற்புறுத்தி) மட்டுமே www.itcornerlk.blogspot.com என்ற இந்த முகவரியை பார்த்திருப்போம்.


தொழில்நுட்பம் சார்ந்து நான் மட்டும் தான் பதிவெழுதுகிறேனா என கூகிளிடம் (Google) கேட்டதில் வந்த பதிலைப் பார்த்து மலைத்துப் போனேன். உலகின் அனைத்து மொழிகளிலும் உள்ள வலைப்பதிவுகளிலேயே அதிகமானவை தொழில்நுட்பம் சார்ந்துதான் எழுதப்படுகின்றன, எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிலும் தமிழ் மொழியில் இந்திய பதிவர்கள் அழகான தமிழ்ப் பெயர்களோடு தொழில்நுட்ப வலைப்பதிவுகளோடு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் (வந்தேமாதரம், என் ராஜபாட்டை, கணினி உலகம், தமிழ் CPU, அலசல்கள் 1000 போன்று இன்னும் பலர்) இவர்களுக்கு மத்தியில் நம் பதிவை பிரபலமாக்குவது எவ்வாறு? மனம் தளராமல் எழுத ஆரம்பித்தேன். அன்றாடம் தொழில்நுட்ப உலகினில் நடக்கும் மாற்றங்களையும் செய்திகளையும் பற்றியே (பேஸ்புக்கின் புதிய தோற்றம், ட்விட்டர் கணக்கு தொடங்குவது எப்படி?, சமூக வலைத்தள விட்ஜெட்டை ப்ளாக்கில் இணைக்க..) சக தொழில்நுட்ப பதிவர்கள் எழுதிக் கொண்டிருக்க கணினி உலகின் விட்டுப்போன சில பழைய விடயங்களை தேடி எடுத்து அவற்றையே ஒரு பதிவாக எழுதி வந்திருக்கிறேன். மற்ற தொழில்நுட்ப
வலைப்பதிவுகளில் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதால் சில சுவாரஸ்யமான விடயங்களை இம்மாத மென்பொருள், கணினி விளையாட்டு, இணையத்தளங்கள், வரலாறுகள், துணுக்குகள் இன்னும் பல மாறுபட்ட விடயங்கள் மூலம் மாறுபட்ட வலைப்பதிவாக அமைக்க வேண்டும் என நினைத்து பதிவுகளை அமைத்து எழுதினேன்.

சென்ற வருடம் 2011 ஆரம்பிக்கும் போது சராசரியாக நாளொன்றுக்கு ஆக கூடியது 70பேர் வந்து செல்கின்ற தளமாக என் வலைப்பதிவு மாறியிருந்ததை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் என்னைவிட பல மடங்கு சிறந்த தொழில்நுட்ப பதிவர்கள் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான சக தொழில்நுட்ப பதிவுகளில் சிறந்தவற்றை நானே இணைப்புகளாக தந்திருக்கிறேன். அதிலும் ஒரு கூடுதல் உந்துசக்தி இதுவரை கூகிளில் 31நண்பர்கள் என் வலைப்பதிவை தொடர்கிறார்கள். அவர்களுக்கு

என் நன்றிகள் பல. அது மட்டுமன்றி பின்னூட்டங்கள் அளிக்கின்ற நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


2011ம் வருடம் நகரத் தொடங்கியது. இப்போது நான் எழுதிய மொத்த பதிவுகள் எண்ணிக்கை 99 இல் வந்து நின்றது. அடுத்தது 100ஆவது பதிவு, பல தமிழ்ப் பதிவர்கள் 100ஆவது பதிவு, Century பதிவு, இப்படியாக பல தலைப்புகளில் எழுதி பகிர்வதை கண்டதுமன்றி வாசித்துமிருக்கிறேன். ஆனால் நான் 100ஆவது இடுகை என்று எதை எழுதுவது? அதை யோசித்தே 2 வாரங்கள் கடந்து விட்டன. பொதுவாகவே கணினி துறையை பொறுத்தமட்டில் ஒரு அடுத்த நிலை என்று சொல்வது கணினியிடமிருந்து நாம் கற்றதையும் தாண்டி நாம்

கணினிக்கு கற்றுக் கொடுப்பதுதான். என்ன புரியவில்லையா? அதைதான் Hacking என்று சொல்வோம். அப்படியானால் 100ஆவது பதிவுக்கு விடயம் கிடைத்து விட்டது. உத்தரவின்றி உள்ளே வா! Offline Hacking என்று தலைப்பை போட்டு தொடர்ந்து 3 தொடர்களாக பதிவை எழுதி முடித்தேன். 2010ம் வருடம் நான் எழுதிய மனிதன் VS எந்திரன் என்ற இடுகைகு பின் நான் எழுதிய ஒரு மெகா பதிவு அது. 100ஆவது பதிவு பற்றி 105ஆவது பதிவில் சொன்ன முதல் ஆள் நானாகத்தானிருப்பேன் என நினைக்கிறேன்.

இவ்வாறாக இந்த நிமிடம் வரை பதிவுகள் தெடர்கின்றன. கடந்த இரண்டு வருடங்களும் நான் எழுதிய 100க்கும் மேற்ப்பட்ட பதிவுகள் நிச்சயம் உங்களுக்கு பயனளித்திருக்கும் என எண்ணுகின்றேன்.அது போலவே நீங்கள் அறிந்திராத தகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிணாமங்களை தமிழில் இவ் வருடமும் இங்கே பகிர்கின்றேன்.

இப்போது நன்றியுரை, ஒரு மூலையிலிருந்து பதிவெழுத ஆரம்பித்த என்னுடைய இந்த முயற்ச்சியை மதித்து ஊக்கப்படுத்திய என் சக நண்பர்களுக்கும் என் வலைப்பதிவை இந்த நிமிடம் வரை தரிசித்த அனைத்து வாசகர்களுக்கும், ஒவ்வொரு பதிவையும் இன்ட்லி, தமிழ் 10 போன்ற இன்னும் பல திரட்டிகளில் ஓட்டளித்து பிரபலமாக்கியவர்களுக்கும், கூகிள் கணக்கில் என்னை பின்தொடரும் அனைத்து நண்பர்களுக்கும், உங்கள் பெறுமதியான கருத்துக்களால் பின்னூட்டங்களால் என்னை வளப்படுத்த உதவிய அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள் மீண்டும் மீண்டும்...

இந்த வருடத்தின் முதல் பதிவாக சென்ற இரண்டு வருடங்களிலும் நான் எழுதிய பதிவுகளில் இருந்து அதிகம் தரிசிக்கப்பட்ட 20 இடுகைகளை தொகுத்து தருகின்றேன். 2012 உங்கள் ஒவ்வொருவருக்கும் வெற்றியையும், சமாதானத்தையும் கொண்டுவருகின்ற ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றியுடன் A.Shanojan
   




1 கருத்து:

அணில் சொன்னது…

உங்களது பதிவுலகப் பயணம் பல வெற்றிகளைப் பெற்றுத் தரட்டும். ப்ளாக்கர் ஸ்டேட்ஸ் வழியாக தங்கள் வலைப்பூவை அறிந்து கொண்டேன். தமிழ்CPU குறித்து தங்களது குறிப்பும் நான் எதிர்பாராத ஒன்று. ஊக்கமளிக்கும் தங்களது வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

Share With your friends