13 அக்டோபர், 2013

தொடரறா (Online) தரவு சேமிப்பும் மிகப்பிரபலமான 5 தொடரறா தரவு சேமிப்பு சேவை வழங்குனர்களும் (பகுதி 01)



ஆரம்பிக்க முன்…

மீண்டும் பல நாட்கள் கழித்து எனது வலைப்பதிவின் ஒரு பதிவு மூலமாக உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி… கடந்த சில வாரங்களாக எனது இந்த தளத்தின் வாசகர்களின் வருகை அதிகரித்திருக்கிறது, எனது வலைப்பதிவின் பதிவுகளை வாசிக்கின்ற நண்பர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள்… முதலாவது தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக நீங்கள் இங்கு வந்து பதிவுகளை (Posts) வாசித்து பயன் பெறுகிறீர்கள் அதோடு நின்றுவிடாமல் உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களையும் மற்றும் இன்னும் நீங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களையும் குறிப்பிடுங்கள் மேலும் இது போன்று தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக இருக்கின்ற உங்கள் நண்பர்களுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுபோலவே மிக முக்கியமானது எனது முன்னைய கால பதிவுகளில் தரவிறக்கத்திற்காகவோ அல்லது ஏதேனும் இணையத்தள முகவரிகளோ பதிவுகளில் வழங்கப்பட்டிருந்தால் சேவையக மாற்றங்கள் காரணமாக தற்காலங்களில் அவை செயல்படாமல் போகலாம்… அவ்வாறான இணைப்புக்களை மறக்காமல் பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்.. நன்றி.

******************************************************************************************************************************************************************

கணினி துறையை பொறுத்தவரை இணையத்தின் தோற்றம் மிக முக்கிய படிக்கல் என்றாலும் இணையத்தின் வேகத்தினை துரிதப்படுத்திய அகல்கற்றை (Broadband) தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னரே இணையத்தின் முழுமையான பயன்பாடும் அவசியமும் உணரப்பட்டதெனலாம். அந்தவகையில் இணையம் மூலமாக என்னவெல்லாம் சாதிக்கின்றோம், அதனை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதெல்லாம் எமக்கு நன்கு தெரிந்ததே… அந்த வரிசையில் நான் முன்சொன்ன அகல்கற்றை (Broadband) தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னர் அறிமுகமான வசதிகளில் ஒன்றுதான் தொடரறா தகவல் சேமிப்பு.

சாதாரணமாக தரவுகள் தகவல்கள் என்பவற்றை சேமிப்பது என்பது எமக்கு தெரியும். அது என்ன தொடரறா தகவல் சேமிப்பு? அதாவது உங்கள் தகவல்களை இணையம் மூலமாக எங்கிருந்தும் ஆளுகை செய்யக்கூடிய வகையில் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு சேவையகத்தில் சேமிப்பதும் தனிப்பயனாக்கப்பட்ட (Customized) வழி மூலமாக மீளப்பெறுவதும் உள்ளவற்றை புதுப்பித்தலுமே தொடரறா தகவல்  சேமிப்பு எனப்படுகிறது. இது Cloud Storage  என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த செயற்பாடுகளை விளக்குகின்ற வரிப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது.




தொடரறா தகவல் சேமிப்பு எவ்வாறு இயங்குகின்றது? அதன் செயன்முறைகள் என்னவென்பது பற்றியெல்லாம் அறிந்து கொண்டோம், இனி இந்த புதுநுட்பத்தை எவ்வாறு இணையத்தோடு இணைந்த எமது அன்றாட பணிகளில் பயன்படுத்துவது அதற்கான சேவை வழங்குனர்கள் பற்றி பார்க்கலாம். எமது தரவுகளை எமது கணினிகளின் வன்தட்டுக்களிலேயே (Hard Disk) எப்போதும் சேமித்திருப்போம். பாதுகாப்புக்காக கடவுச்சொற்கள் கூட அமைத்திருப்போம். வன்தட்டுக்களில் தரவுகளை சேமிப்பது சரிதான், அனால் அவை உங்கள் தரவுகளை 100%  சரியாக பேணுமா என்றால் நிச்சயமாக இல்லை. வன்தட்டுக்கள் பழுதடைதல், வைரஸ் தாக்கம், Data corrupt இப்படியாக பல காரணங்கள் சொல்லலாம். அதுபோலவே மிக முக்கியமான மற்றொன்று Data Backup. பலபேர் தங்கள் Backupகளை DVDகளிலோ அல்லது Hard Diskலேயே வைத்திருப்பார்கள். அவசர System Restore வேலைகளுக்கு இது கைகொடுத்தாலும் உண்மையில் இவ்வாறான Back Up ள் பாதுகாப்பற்றவைதான். அப்படியானால் இந்த வேலைகளை பாதுகாப்பாகவும் அதிக நாள் பேணக்கூடியவாறும் மேற்கொள்ள என்ன செய்யலாம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இங்குதான் நான் சொன்ன தொடரறா தகவல் சேமிப்பு உதவிக்கு வருகிறது. தொடரறா சேவையகங்கள் (Online Servers) என்பவை பாதுகாப்பானதும் தனிப்பயனாக்கம் செய்யக்கூடியவை மட்டுமன்றி இணையம் மூலமாக எங்கிருந்தும் அணுக கூடியவை. எனவே முக்கியமான தரவு சேமிப்புக்கள், Back Up போன்ற வேலைகளுக்கு இதனை பயன்படுத்தலாம்.

இந்த சேவையை இணையப்பரப்பில் பல நிறுவனங்கள் பலவிதமாக வழங்குகின்றன. அதில் நம்பகத்தன்மையானதும் பாதுகாப்பானவையுமாக சிறந்த 5 சேவைகளையும் அவற்றை பயன்படுத்துகின்ற வழிமுறைகளையும் தொகுத்து பகுதி02 இல் தருகிறேன். கருத்துக்களை மறக்காமல் எழுதுவதோடு உங்கள் நண்பர்களோடும் பகிருங்கள்….

12 அக்டோபர், 2013

மடிக்கணினி (Laptop) பயன்படுத்துபவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சுலபமான 8 பராமரிப்பு வழிமுறைகள்



நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் கணினிகள் என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத சாதனமாக மாறிவிட்டது. ஆனாலும் இன்றைய நாட்களில் மேசைக்கணினிகளை (Desktop Computers) விட மடிக்கணினிகள் (Laptop) தருகின்ற அதிகமான வசதிகளாலும் பாவனைக்கு இலகுவாக அமைவதனாலும் இப்போது பெரும்பாலான வகை மடிக்கணினிகளை மேசைக்கணினிகளின் விலையிலேயே கொள்வனவு செய்ய முடிவதும் அனைவரினதும் மோகமும் மடிக்கணினிகள் நோக்கி திருப்பியிருக்கிறது. இதனால் இப்போதெல்லாம் வீட்டுக்கொரு மடிக்கணினி என்ற நிலை தோன்றியிருக்கிறது. ஒப்பீட்டளவில் மேசைக்கணினிகளை விட மடிக்கணினிகள் பல வசதிகளையும் பாவனைக்கு இலகுவாகவும் அமைந்தாலும் ஒரு மடிக்கணினியை நீண்டகாலம் ஒழுங்காக பாவிப்பதற்க்கும், அது சிக்கலின்றி இயங்குவதற்கும் அவற்றை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.

ஆனாலும் அவையும் சாதாரண ஒரு கணினி செய்கின்ற வேலையைதானே செய்கின்றன அவற்றை ஏன் விஷேடமாக பாரமரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்? அல்லது வெறுமனே தூசு தட்டினால் போதமானது என்று சிலர் நினைக்கலாம் ஆனால் தூசு தட்டுவது மட்டும் ஒரு மடிக்கணினிக்கு பாதுகாப்பை ஏற்படுத்தாது. வன்பொருள் ரீதியாகவும் மென்பொருள் ரீதியாகவும் அவை பாரமரிக்கப்படும் போது மாத்திரமே மடிக்கணினிகள் சிறப்பாக இயங்கும். அவ்வாறு நீங்களும் உங்களுக்கென்று ஒரு மடிக்கணினியை உபயோகிப்பவராக இருந்தால் உங்களுக்கு பயன்படக்கூடிய சில பராமரிப்பு முறைகளை தொகுத்து தருகின்றேன். அவற்றை பின்பற்றி உங்கள் மடிக்கணினிகளின் பாவனையையும் செயல்பாட்டையும் வினைத்திறனாக்குங்கள். 





#1 தூசுகளிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். (Watch out for dust)

எமது சாதாரண மேசைக்கணினிகள் போன்றே மடிக்கணினிகளிலும் வெப்பம் மற்றும் தூசு போன்றவற்றை வெளியேற்றுவதற்கான Processor Fan மற்றும் அதற்கான துவாரங்களும் காணப்படும். மடிக்கணினிகள் தொடர்ந்து பாவிக்கப்பட்டாலும் இந்த துவாரங்களை நாம் கவனிப்பதில்லை, இதனால் ஏனைய பாகங்களை விட இந்த துவாரங்கள் அமைந்துள்ள பகுதிகள் மட்டும் தூசி படிந்து காணப்படும். இந்நிலை நீடிக்குமானால் காலப்போக்கில் அந்த துவாரங்கள் அடைக்கபட்டு CPU Fan இனால் ஒழுங்காக வெப்பத்தை/தூசிகளை வெளியேற்ற முடியாமல் போவதுடன் அது அதிக வெப்பமான (Over heating) நிலையை தோற்றுவிக்கும். இதனால் உங்கள் மடிக்கணினி மட்டுமல்ல உங்கள் உடலுக்கும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம், எனவே உங்கள் மடிகணினிகளின் வன்பொருள் பாகங்களை வாரமொரு முறை சுத்தம் செய்யுங்கள்.

#2 குளிர்மையாக வைத்திருங்கள் (Keep it cool)

நீங்கள் அதிகமான நேரம் தொடர்ந்தும் மடிக்கணினியை பாவிப்பவராக இருந்தால் மின்விசிறியின் (Fan) அருகிலோ அல்லது குளிரூட்டி பொருத்தப்பட்ட இடத்திலோ நீங்கள் இருந்து உங்கள் மடிக்கணினியை பயன்படுத்துவதுடன் நேரடியான உங்கள் மடியில் வைத்து அதிகநேரம் மடிக்கணினிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் அவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாத போது Lap tray பயன்படுத்துங்கள் அல்லது Cushion போன்ற அமைப்புக்கள் மீது வைத்து பயன்படுத்துங்கள்.

#3 சிறந்த வைரஸ் தடுப்பு மென்பொருளை பாவியுங்கள். (Install a firewall and antivirus software)

உங்கள் கணினியின் இயங்கு முறைமையானது (Operating System) நச்சுநிரல் (Virus) பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும். அதிலும் இணையப் பயன்பாடு கொண்ட மடிக்கணினியாக இருந்தால் இந்த ஏற்பாடு அவசியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் Apple இன் Mac வகை மடிக்கணினிகளையோ அல்லது Ubuntu போன்ற இயங்குதளங்களை பயன்படுத்தினால் இந்த கவலையில்லை. ஆனால் Microsoft இனது எந்தவொரு பதிப்பை (Xp, Vista, 7, 8) பயன்படுத்தினாலும் நிச்சயம் வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவ வேண்டும். சில மடிக்கணினி வகைகளோடு Original Windows Genuine Windows தொகுப்பு வழங்கப்படும் அவ்வாறான கணினி கொண்டவர்கள் Microsoft இலவசமாக தருகின்ற Security Essentials மென்பொருளை பயன்படுத்தலாம் அதையே Microsoft பரிந்துரைக்கிறது. அவ்வாறில்லாமல் Pirated Version பயன்படுத்துபவர்கள் ஏதேனும் நல்ல Antivirus (Bit defender, Kaspersky, Avast, AVG, etc...) மென்பொருளை நிறுவுவது சிறந்தது.

#4 தேவையில்லாத மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் (Eliminate unused programs)

நீங்கள் பயன்படுத்துகின்ற மடிக்கணினியை நீங்கள் அதிகமாக எந்த தேவைக்காக பயன்படுத்துகிறீர்கள் மற்றும் உங்களுக்கு அவசியம் தேவைப்படுகின்ற மென்பொருள்களை மட்டுமே மடிக்கணினிகளில் நிறுவுங்கள், தேவையற்ற செயலிகளை (Program) நிறுவுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் மடிக்கணினியின் செயற்பாட்டு வேகம் அதிகரிக்கப்படுவதுடன் மடிக்கணினியின் சீரான மற்றும் நெடுநாள் பாவனைக்கும் வழிவகுக்கும். மேலும் தேவையற்ற மென்பொருட்களை தவிர்ப்பது உங்கள் வன்தட்டின் (Hard disk) சேமிப்பளவினையும் (Storage space) அதிகரிக்கும் இதனால் முக்கியமான தரவுகளை அவசர வேளைகளில் சேமிக்கவும் முடியும்.

#5 உங்கள் தகவல்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள் (Defragment hard drives)

சாதாரணமாக எந்தவிதமான கணினியை பயன்படுத்துபவர்களும் அறிந்திருக்கின்ற விஷயம் என்று நினைக்கின்றேன். கணினியை பாராமரிக்கின்ற வழிகளில் மிக முக்கியமானது. காரணம் நீங்கள் அதிகளவு மென்பொருட்களையும் கோப்புக்களையும் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணினி ஒழுங்காக இயங்குவதற்கும் கணினியின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். வன்தட்டில் அதிகளவு தரவுகள் பதியப்படுகின்ற போது அவை குறித்த ஒழுங்கில் சீராக அடுத்தடுத்து எப்போதும் பதியப்படுவதில்லை, இதனால் இடப்பற்றாகக்குறை, நீங்கள் தரவுகளை மீளப்பெற முயற்சிக்கின்ற போது அதற்க்கு அதிகளவு நேர விரயம் போன்ற பல சிக்கல்களும் தோன்றும், இதனை தவிர்க்க வன்தட்டில் குழம்பிக்கிடக்கின்ற தரவுகளை வரிசையாக அடுக்கி சீர்படுத்துகின்ற செயன்முறைதான் Defragment என்று சொல்லப்படுகின்றது. இதனை குறைந்தது வாரத்தில் ஒருமுறையாவது செய்வது சிறந்தது. Start->Allprograms->Accessories->System Tools->Disk defragment சென்று உங்கள் மடிக்கணினியையும் ஒழுங்குபடுத்தலாம்.

#6 பதிவுகளை தெளிவுபடுத்துங்கள் (Clean your registry)

உங்கள் கணினியில் நீங்கள் எந்தவொரு மென்பொருளையும், கோப்புக்களையும் (Files) பயன்படுத்தும் போதோ அல்லது நிறுவும் போதோ உங்கள் கணினி அநைத செயல்பாடு ஒவ்வொன்றுக்குமான பதிவுகளை தன்னுள் சேமத்து (Registry) கொள்கிறது. இவை சீராக எந்தவித பிரச்சினைகளுமின்றி (Corrupt) இருக்கின்றபோது மட்டுமே கணினியானது சீராக இயங்கும். இந்த Registry Cleaner இல் ஏற்படும் பிரச்சினைகள் நேரடியாக வெளிக்காட்டப்படுவதில்லைஇவை மறைமுகமான பாதக விளைவுகளையே ஏற்படுத்தும், அதே போல அந்த பிரச்சினைகளை நேரடியாக சரிசெய்வது சிரமம் இதனால் இதற்கென்று சில Registry Cleaner மென்பொருட்கள் இருக்கின்றன. சிறந்த ஒரு மென்பொருளை நிறுவி உங்கள் கணினியின் Registryயை சோதித்து கொள்ளுங்கள்.

#7 தற்காலிக கோப்புக்களை நீக்கிவிடுங்கள் (Delete temporary internet files)

நீங்கள் இணையப்பக்கங்களில் உலாவருகின்ற போது உங்கள் உலாவிகளால் உங்கள் கணினிகளில் சேமிக்கப்படுகின்ற கோப்புக்கள் மற்றும் சில மென்பொருள்களால் தானாகவே உருவாக்கப்படுகின்ற கோப்புக்களே Temporary Files எனப்படுகின்றன. இவற்றை கிரமமாக (Regular) நீக்குவதன் மூலம் உங்கள் மடிக்கணினியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். Run இல் சென்று %Temp% என தட்டச்சு செய்து Ok அழுத்த கிடைக்கின்ற சாளரத்தில் (Window) உள்ள அனைத்து  கோப்புக்களையும் தெரிவு செய்து அழித்து விடுங்கள். ஓரிரண்டு கோப்புக்களை அழிக்க முடியாது, காரணம் அவை உங்கள் இயங்குமுறைமைக்கான கோப்புக்கள்.

#8 மின்கலங்களை பராமரியுங்கள். (Power surge protection)

மடிக்கணினிகளை பொறுத்தவரையில் அதனுடைய மின்கலங்கள் (Battery) மிக முக்கியமானவை. உங்கள் மடிக்கணினியின் மின்கலத்தை சிறப்பாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை கைக்கொள்ளுங்கள்.

  • எப்போதும் over charging செய்யாதீர்கள். Battery charge ஆனவுடன் மின் இணைப்பை துண்டியுங்கள்.
  • மடிக்கணினியை பாவிக்காத வேளைகளில் முக்கியமாக இரவுப் பொழுதுகளில் Charge இல்   வைத்துவிடாதீர்கள். மின்னோட்டத்தில் அதிகரிப்பு/குறைவு அடிக்கடி ஏற்படுவதால் அது batteryயை பாதிக்க கூடும்.
  • முடியுமானவரை Battery யை முழுமையாக பாவியுங்கள். Battery Low செய்தி கிடைத்த பின்னரே Charge செய்யுங்கள். ஆனால் முக்கியமான நேரங்களில் இது அவசியமில்லை.

நான் மேற்சொன்ன இந்த 8 வழிமுறைகளையும் தொடர்ந்து கைக்கொள்வதன் மூலம் உங்கள் மடிக்கணினியையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் எந்தவொரு செய்முறையும் கட்டாயமானது இல்லை. ஆனால் பொதுவாக ஒரு கணினி சீராக இயங்க இவற்றை கைக்கொள்ள வேண்டும். கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 -ஷான்

30 ஜூன், 2013

விளம்பர இணைப்புக்களின் (Adware URL/Shrinked URL) தொல்லைக்கு முற்றுப்புள்ளி



# இணையமூடான தரவுப்பரிமாற்றம் என்றால் என்ன?

தகவல் பரிமாற்ற செயன்முறையில் இணையத்தின் பங்கு மிகவும் அதிகமாகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் நொடிக்கு நொடி பல மில்லியன்  கணக்கான இணையப் பயனர்கள் இணையமூடாக தரவுகளை பரிமாறிக் கொள்கின்றனர். தரவுகள் எனும் போது ஆவணங்கள், இசை, காணொளிகள், மென்பொருள் என்று பலதும் இதில் அடங்கும். இந்த தரவுப் பரிமாற்றத்தை இரு வகையாக பார்க்கலாம். ஒன்று இரு தனிப்பட்ட கணினிகளுக்கிடையில் இணையம் எனும் ஊடகம் வாயிலாக தரவு பரிமாற்றப்படுதல், மற்றையது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட சேவையகத்திலிருந்து பல்வேறு தனிப்பட்ட கணினிகளுக்கு தரவுகள் பரிமாற்றப்படுதல் ஆகும். 

#தரவிறக்க இணைப்புக்கள் எவ்வாறு தொழிற்படுகின்றன?

நாம் Email மற்றும் Cloud Computing போன்ற முறைகளில் எமது  நண்பர்கள் உறவினர்களோடு தரவுகளைப் பகிர்ந்து கொள்வது முதலாவது வகையினுள் அடங்கும். இரண்டாவது சாதாரணமாக நாம் இணையத்தில் இருந்து தரவுகளை பதிவிறக்கம் (Download) செய்வதை குறிக்கும். இதில் Download எனப்படும் இந்த இரண்டாம் வகை தரவுப்பரிமாற்றத்தின் போது நான் முன் சொன்னது போல பொதுவான சேவையகத்திலிருந்து வெவ்வேறான தனியார் கணினிகள் தரவைப் பெற அந்த தரவுக்கான ஒரு பொது இணைப்பு வழங்கப்படும். இதனூடாக குறித்த தரவு பல்வேறு கணினிகளுக்கும் பகிரப்படும். 



இந்த தரவிறக்க இணைப்புக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக அமைவதில்லை. காரணம் தரவுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட சேவையகங்களில் இருந்து பரிமாற்றப்படுகின்றன. இதில் தற்போது புதிதாக அறிமுகமாயிருக்கும் முறைதான் இவ்வாறான இணைப்புக்களை சுருக்குதல் 
எனப்படும் Shrink URL வசதி. இது உருவாக்கப்பட்ட காரணம் மிக நீளமான இணைப்புகளை எளிதாக அடையாளம் காணும் படியாக சிறிய வடிவில் பயனர்களுக்கு வழங்கவும் Twitter போன்ற வலைத்தளங்களில் இலகுவாக பகிர்வதது போன்றவற்றிற்காகவே. ஆனால் இப்போது இது இணையத்தில்
பணம் பெறும் உத்தியாக மாறியிருக்கிறது. adf.ly, LinkBucks, wwy.me போன்ற தளங்கள் மூலம் உங்கள் தரவிறக்க சுட்டிகளை நீங்கள் சுருக்கி பகிரும் போது அந்த இணைப்புக்களை ஒவ்வொரு முறையும் கிளிக் செய்யபடும் போது அந்த இணைப்யுக்குரியவருக்கு குறித்த தொகை பணத்தை பெறும் வாய்ப்பை வழங்குகிறது. 

இதுவரையிலும் எந்த பிரச்சினைகளுமில்லை. ஆனால் மறு புறம் நீங்கள் குறித்த சுருக்க இணைப்பை கிளிக் செய்து செல்லும் போது இந்த இணையத்தளங்கள் குறித்த நேரம் வரை காத்திருக்க சொல்வதோடு தேவையற்ற விளம்பரங்களை உங்கள் கணினியில் காட்சிப்படுத்தும் அதுமட்டுமல்லாமல் உங்கள் கணினி முறையான Internet Security யை கொண்டிராவிட்டால் அவர்களின் Ad-wareகளும் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். 

எனவே வெறும் சுருக்கப்பட்ட இணைப்புகளை மட்டும் வைத்து அவற்றின் நேரடி இணைப்பை கண்டுபிடிக்க ஒரு இணையத்தளம் உங்களுக்கு உதவுகிறது. உங்களிடமுள்ள சுருக்கப்பட்ட இணைப்பை இந்த இணையத்தளத்தில் Paste செய்து Extract என்பதை அழுத்த அதன் உண்மையான இணைப்பை காண்பிக்கும். இதன் மூலமாக தேவையற்ற Ad-ware URLகளின் தொல்லையை குறைத்து கொள்ளலாம்.


5 பிப்ரவரி, 2013

உங்கள் கணினியின் Google Chrome உலாவியின் Theme ஐ நீங்கள் விரும்பியபடி வடிவமைப்பது சாத்தியமானதா?




நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது தகவல் தொழில்நுட்பம்; அதனோடு இயைந்தாற் போல எமது தேடல்கள், தேவைகள், பயன்பாடுகள் என்பவையும் மாறிக் கொண்டிருக்கிறன. அதிலும் தகவல் தொழில்நுட்ப (IT) துறையை பொறுத்தவரையில் குறிப்பாக கணினியின் செயல்பாடுகளில் அனைத்துமே இணையம் மற்றும் தொடரறா (Online) நிலை எனும் பாரிய சக்தியால் கொஞ்சங் கொஞ்சமாக கவரப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே நாமும் எமது கணினி சார்ந்த நாளாந்த செயற்பாடுகளுக்காக இணையத்தில் தவம் இருக்க வேண்டிய நிலையும் தோன்றியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்றளவில் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்த வரையில் பணிபுரிவது முற்றிலும் இணையம் ஊடாகவே எடுத்தாளப்படுகிறது. கணினியை பொறுத்தவரையில் பயனர்களைப் (users) இணையத்தோடு கைகுலுக்க வைக்கின்ற முக்கிய காரணி இணைய உலாவிகள்தான் (Web Browsers). தற்போது பாவனையில் பல்வேறு வகையான Web Browsers இருந்தாலும் புள்ளிவிபர அடிப்படையிலும், அனுபவ அடிப்படையிலும் இங்கு Google Chrome உலாவியை தெரிவு  செய்திருக்கிறேன். 

இது இவ்வாறிருக்க கணினிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களின் இடைமுகம் (User Interface), வடிவமைப்பு (Theme) என்பன முக்கியமானவை. பொதுவாக அனைத்து மென்பொருள்களினதும் இடைமுகங்களும் பயனர்களை (Users) கவரக்கூடிய வகையிலும் எமது வேலைகளை செவ்வனே செய்யம் படியாகவுமே வடிவமைக்கப்படுகின்றன. அதிலும் அவற்றின் தன்மைகளை நமது விருப்பப்படி வடிவமைப்பதற்க்கு ஏற்றவாறு அமையும் பொது அம்மென்பொருள்களில் பணிபுரிவது இன்னும் இலகுவாகவும், சௌகரியமானதாகவும் அமையும்.  இதனையே தனிப்பயனாக்கம் (Customizing) என்போம். அதிலும் இப்பொதெல்லாம் இணைய உலாவிகளையே எமது தேவைகளுக்காக அதிகம் பயன்படுத்துகிறோம். Google நிறுவனம் தனது தயாரிப்பான Chrome உலாவிக்கு பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களும் Themeகளை தருகின்றது. ஆனாலும் உங்கள் கணினியின் Chrome மென்பொருளுக்கு நீங்களே ஒரு Theme ஐ உருவாக்கலாம். இதனை சாத்தியமாக்குவதனை பற்றி இந்தப் பதிவிலே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.   

#Chromium Theme Builder

இது உங்கள் கணினியின் Google Chrome மென்பொருளுக்கான Theme உருவாக்க பயன்படும் மென்பொருளாகும். வெறுமனே 816KB கொள்ளளவு உள்ள இதை Unzip சேய்து கொள்வதன் முலம் இயக்க முடியும். இதனை நிறுவ வேண்டிய அவசியமில்லை. எளிமையான செய்முறைகள் முலம் 5 படிமுறைகளில் நீங்களே ஒரு Theme ஐ உருவாக்கி விடலாம். தரவிறக்க சுட்டி.

#Chrome Theme Maker

இதுவும் உங்கள்  கணினியின் Google Chrome மென்பொருளுக்கான Theme உருவாக்க பயன்படும் மென்பொருளாகும். அதிலும் இது Online இல் தொழிற்படும் Tool. இதன் மூலம் Chrome Browser இன் Tab, Frame, Toolbar மற்றும் Background போன்றவற்றை மாற்றம் செய்ய முடியும். மேலும் உங்கள் வசதிக்கேற்ப மேலதிக தெரிவுகளை சேர்க்கவும் முடியும். இலகுவான படிமுறைகள் என்பதால் மேலதிக விளக்கம் அவசியமில்லை. முகவரி

இவ்வாறு நீங்கள் இவற்றை கொண்டு உருவாக்குகின்ற Themeகள் மற்றவர்களுக்கும் பயன்படும் அல்லது ஏனையோராலும் விரும்பப்படும் என நீங்கள் நினைத்தால் ChromeTheme.net என்ற முகவரியில் பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதனால் நீங்கள் ஒரு சிறந்த Chrome Theme Builder
ஆகுவதற்கான வாய்ப்பும் உள்ளது.



21 டிசம்பர், 2012

உங்கள் Android சாதனங்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க இலகுவான படிமுறைகள்

வருடத்தின் இறுதி மாதத்தின் மற்றொரு பதிவில் உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்தப்பதிவு இன்றைய நாட்களில் பலருக்கும் பழகிப் போய்விட்ட அல்லது மிகவும் அதிகளவில் இளைய தலைமுறையினரின் கைகளில் புழங்குகின்ற Smart phone வகை தொலைபேசிகள் மற்றும் அதனுடன் சேர்ந்தாற் போல அவ்வாறான சாதனங்களில் பெரும் பங்கினை தனதாக்கியிருக்கின்ற Android இயங்குமுறைமைகளையும் பற்றியது. தொழில்நுட்ப வலைப்பதிவு என்ற முறையில் முன்னைய பல பதிவுகளுக்காக முன்சொன்ன இவை இரண்டு பற்றியும் பல தகவல்களை தந்திருக்கிறேன். ஆனாலும் புதிய பதிவு என்ற வகையில் நான் எனது வலைப்பதிவில் Android மற்றும் Smart phone பற்றி முன்னர் சொல்லாத புதிய கருத்துக்களுடன் இந்த பதிவினை முன்வைக்கிறேன், மேலும் அறிய விரும்புபவர்கள் வகையும் தொகையும் பகுதியில் பொருத்தமான Tag இல் தேடி வாசியுங்கள். Android வகையிலான இயங்கு முறைமைகளை பொறுத்தவரையில் ஏனைய வகை Smartphone களோடு ஒப்பிடுகையில் விலை குறைவாக பெற்றுக் கொள்ள கூடியது. இலகுவாக அதனுடைய செயன்முறைகளை புரிந்து கொள்ள முடிவதுடன் அதற்கான உதிரிப்பாகங்களைக்கூட இலகுவாக சந்தையில் பெற முடியும். அந்த வகையில் பெரும்பாலான இளைய தலைமுறைனரிடையே மட்டுமன்றி உயர் தொழில் புரிவோர், ஊடகத்துறையினர், பிரபலங்கள் என பல தரப்பினரும் அவரவர் தேவைக்கேற்றால் போல பயன்படுத்துகிறனர்.

Android எனும் போது அது Smart phone மட்டுமன்றி Tablet PC வகைகளையும் குறிக்கின்றது. ஆகவே இந்தப்பதிவு Tablet PC பாவனையாளர்களுக்கும் பொருந்தும். ஒரு முழுமையான கணினிக்கு ஈடாக செயற்படக்கூடியது என்பதாலும் அதிகளவான தனிப்பயனாக்கங்களை (Customization) சாத்தியமாக்குவதாலும் நுணுக்கமான வன்பொருள் கூறுகளை கொண்டதாலும் கணினிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுமே ஒரு Smart phoneஇற்கும் Tablet PC களுக்கும் தேவையாகின்றன. ஆனாலும் பலர் இது தொடர்பில் அக்கறை கொள்வதே இல்லை. இதன் விளைவு உங்களின் சாதனங்களுக்கு பாதகத்தையே உருவாக்கும். இவ்வாறு உருவாகின்ற பாதகமான சூழ்நிலைகளில் முக்கியமானது Android சாதனங்களின் இயக்க வேகம் குறைவடைவதுதான். ஆனாலும் சில எளிமையான நடவடிக்கைகள் மூலம் இது போன்ற ஆபத்துக்களை வரும் முன் காக்கலாம். 

#1 Manage Background Apps

இதனைப் பற்றி பார்ப்பதற்க்கு முன்னர் Background Programs என்பதற்க்கான சரியான புரிதல் உங்களிடம் இருக்க வேண்டும். சாதாரணமாக தனிநபர் கணினிகளையே (PC) எடுத்துக்கொண்டால் நாங்கள் எங்கள் தேவைக்கேற்ப பல மென்பொருட்களை வன்தட்டில் பதிந்து பயன்படுத்துகின்றோம். அவற்றை நாம் விரும்புகின்ற போது மட்டும் திறந்து பயன்படுத்துவோம். அவ்வாறான வேளைகளில் அவை உங்களின் System மூலமாக இயங்கும். அது சாதாரண செயல்பாடு எனினும் எல்லா வகை மென்பொருள்களும் இந்த விதியை பின்பற்றுவன அல்ல. மாறாக அவற்றின் தேவை கருதியும் அல்லது விளம்பர நோக்கம் கருதியும் சில மென்பொருள்கள் நீங்கள் விரும்பாமலேயே உங்கள்
System செயல்படுகின்ற போது பின்புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். இது உங்களின் Computer, Smart phone, Tablet PC போன்றவற்றின் இயக்கத்தை மந்தமாக்குவதுடன் உங்களால் இயல்பாக ஒரு பணியை செய்ய முடியாமலிருக்கும். இதனை தவிர்க்க அவ்வாறு தேவையில்லாமல் இயங்குகின்ற மென்பொருள்களை நிறுத்த வேண்டும். இனி உங்கள் Android சாதனங்களுக்கு வருகிறேன். கணினியைப் போன்றே அவற்றிலும் System Tray பகுதி இருக்கிறது. இதை அவதானிப்பதால் தற்போது இயக்கத்திலிருக்கின்ற மென்பொருட்களை நிறுத்திவிடலாம். ஆனாலும் Settings > Applications > Running Services (அனைத்து Android சாதனங்களுக்கும் பொதுவானது) என்ற வழியில் சென்றால் தற்போது இயக்கத்திலிருக்கின்ற மென்பொருட்களை அது பட்டியலிடும். இதில் முக்கியமானது உங்கள் சாதனங்களுக்கான Anti Virus  Internet security போன்ற மென்பொருட்களும் அதில் இருக்கும். இதனால் அவற்றை நிறுத்தி விடாதீர்கள். தேவையற்ற ஏதேனும் மென்பொருட்கள் இயக்கத்தில் இருந்தால் மாத்திரம் இதை செய்யுங்கள். 

#2 Uninstall Unused Apps

பொதுவாக நம்மில் பலர் புதிதாக இவ்வாறான Android சாதனங்களை வாங்கியதும் ஆர்வக் கோளாறில் எக்கச்சக்கமான App, Games போன்றவற்றை Google Play யில் இருந்து தரவிறக்கி Smartphone/Tablet PC யின் Internal Storage இனை நிறைத்து வைத்திருப்போம். ஆனால் காலம் செல்ல சில App களை தொட மறந்து விடுவோம். அவை வெறுமனே Menuவில் இடத்தை பிடித்து கொண்டு இருக்கும். அதே போன்று நீங்கள் Smartphone வகைகளில் External memory chip இனையும் இணைத்திருப்பீர்கள். இவ்வாறான நிலைமைகளில்Internal storage முழுதாக நிரம்பிய பின் External Storage இனுள் எல்லாவற்றையும் கொட்டி கொண்டிருப்போம். உண்மையில் இது நல்லதல்ல. எப்போதும் உங்கள்  Android சாதனங்களின் Internal storage இன் கொள்ளளவில் கால் பகுதி வெறுமையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். தவிர Unused Apps இனை நீக்க Settings > Applications > Managed Services இங்கு சென்று Downloaded Tab இல் தேவையற்றதை நீக்குங்கள்.

#3 Manage Widgets, Live Wallpapers and Animations

Android மூலமாக இயங்குகின்ற சாதனங்களைப் பொறுத்த வரையில் Widget மற்றும் Live wallpapers என்ற இரண்டும் முக்கியமானதும் பிரபலமானதும் கூட. இவை இரண்டினதும் ஒற்றுமை உங்கள் சாதனங்களின் வரவேற்பு பக்கத்தை அழகுபடுத்துவதுதான். மேலும் Widget பொறுத்தவரையில் காலநிலையை தெரிந்து கொள்ள, நேரம் பாரக்க, Alarm போன்றவற்றை ஒரே பகக்த்தில் இலகுவாக காண வழி செய்யும். ஆனால் இது அளவு கடந்தால் உங்கள் சாதனங்களின் CPU இதற்காக அதிகமாக இயங்குவதனால் அவற்றின் வேகம் குறைவடைவதுடன் Batteryஆயுளும் குறைந்துவிடும். அது போலத்தான் Live wallpaperகளும். இதனை அனைவருக்கும் புரியும் படியாக அறிமுகப்படுத்துவதென்றால் அசைவூட்டங்களுடன் கூடிய (Animation) நிலையான படிமம் (Image) போன்றது. இவையும் உங்கள் சாதனங்களின் வினைத்திறன் Battery ஆயுள் போன்றவற்றை குறைப்பதில் பாரிய செல்வாக்குடையது. ஆகவே முடிந்தவரை Live wallpaperகளை தவிர்ப்பது நலம். Settings > Display > Animations. இந்த வழியில் சென்று அவற்றை நீக்கலாம்.

#4 Boost your Battery

Android சாதனங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் செம்மையான இயக்கத்திற்கு அவற்றின் Batteryகள் மிக முக்கியமானவை. ஆகவே அவை சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். Battery ஆயுள் குறைவாக இருப்பதுவே பலருக்கும் பெரும் தலையிடி. அதனை உங்கள் சாதனங்களில் சில மாற்றங்கள் செய்வதன் மூலமே சரி செய்துவிடலாம். உங்கள் சாதனங்களின் Screen Brightness Low நிலையிலேயே வைத்திருங்கள். மேலும் தேவையற்ற நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth போன்றவற்றை அணைப்பது நல்லது. இது போன்ற Battery ஆயுளைக் குறைக்கின்ற ஏனைய தேவையற்ற விடயங்களை தவிர்த்து விடுங்கள்.

 


Share With your friends