இணையம் மற்றும் அதனோடிணைந்த ஏனைய தொழில்நுட்பங்கள் இவை இன்றி கற்பனை செய்ய முடியாத ஒரு வாழ்வியலில், இவையெல்லாவற்றையும் பலவாறான தேவைகளுக்கும் பயன்படுத்தி கொண்டிருக்கின்ற போது அதனை இன்னும் கொஞ்சம் வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்கதாக்கவென ஒரு முயற்சி, ஆம் இணையத்தில் உலா வருகின்ற நம்மில் பலர் அறியாத அல்லது அறிந்தும் அதுபற்றி முழுதாக தெரிந்திருக்காத ஒரு இணையத்தளம் அதன் சேவைகள மற்றும் பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்யும் பதிவு. இணையத்தில் உலாவருகின்ற உங்களுக்கு சமூக வலைத்தளங்கள் (Social Networks) பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் நினைப்பது மாதிரி ட்விட்டர், பேஸ்புக் மட்டும் இந்த வகைக்குள் அடங்கவில்லை மாறாக இன்னும் நம்மில் பலர் அறியாத வினோத சமூக வலைத்தளங்களும் உள்ளன.
அவ்வாறான ஒரு தளம்தான் SoundCloud.
பொதுவாக சமூகவலைத்தளங்களென்றாலே நண்பர்களை சேர்த்து கொள்ள, தகவல்களை பரிமாற என இருக்கின்ற போது இந்த தளம் பெயருக்கேற்றாற்போல ஒலிகளை (அதாவது ஒலித்துணுக்குகளை அது இசையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை ஒருவரின் பேச்சாக கூட இருக்கலாம்) பல நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளவும் அதன் மூலமாக நட்புவளையங்களை உருவாக்கி கொள்ளவும் வழிசெய்கிறது. வெளிப்படையாக இது இப்படி இருந்தாலும் இந்த தளத்தை வேறுபல தேவைகளுக்கும் பயன்படுத்தமுடிதல் தான் இதன் சிறப்பு.
அதாவது இதனை நாங்கள் எங்களுடைய ஒலிப்கோப்புகளை சேமித்து வைக்ககூடிய தொடரறா சேமிப்பகமாகவும் பயன்படுத்தலாம். அது போல நீங்கள் சிறந்த குரல்வளம், பேச்சாற்றல் உள்ளவரெனில் உங்கள் VoiceBlog ஆகவும் இதை பயன்படுத்தலாம். அது போல உலகெங்குமுள்ள பிரபல வானொலிகள் தங்கள் Podcast இனை கூட இங்கே பகிர்கிறார்கள்.
* இலங்கையின் சூரியன்FM வானொலியின் நிகழ்சி பகிர்வு (மாதிரி இணைப்பு)
நீங்கள் ஒரு வலைத்தள நிர்வாகியாக இருந்தால் உங்கள் தளத்தில் ஒலியை இணைக்கின்ற தேவை வருகின்ற போது Embeded Widjet வசதியையும் (மேலுள்ளது போல) இது தருகிறது. அதுமட்டுமன்றி பல இளம் கலைஞர்கள் தங்கள் இசை படைப்புக்களை இங்கே பகிர்ந்துகொள்வதனூடாக அவர்களின் முயற்சிக்கான சிறந்த அங்கீகாரத்தை பெறுவதுடன் புகழடையவும் வழிவகுக்கிறது. iOS, Android, Windows போன்ற மொபைல் இயங்குமுறைமைகளுக்கும் இது உள்ளது. ஆகவே பயன்படுத்த இன்னும் எளிதானது. இவ்வாறு பல வசதிகள் தருகின்ற இந்த தளத்தை பயன்படுத்தி பாருங்கள் அல்லது ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.