30 அக்டோபர், 2012

MKV வகை கோப்புக்களை DVD வடிவத்திற்க்கு மாற்றித்தரும் இரண்டு இலவச மென்பொருள்கள்
இன்றைய காலங்களில் பொழுது போக்கு துறையில் கணினி ஆற்றுகின்ற பங்களிப்பு மிகவும் புதுமையானது. விளையாட்டுக்கள் (Games), பாடல்கள் (Audio), இவற்றோடு கணினியில் திரைப்படங்களை பார்த்தலும் பகிர்ந்து கொள்ளுதலும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதிலும் இன்றளவில் திரைப்படத்துறையை பொறுத்தவரையில் அதி உயர்திறன் வாய்ந்த பட அமைப்புக்கள் (High Definition) மற்றும் துல்லியமான ஒலி அமைப்புக்கள் (Dolby Surround sound) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் உயர்தரமான அனுபவத்தை பெற முடிவதுடன் ஒரு சிறந்த பொழுது போக்காகவும் திகழ்கிறது. ஆரம்பத்தில் சாதாரண Video Disk ஆக வெளிவந்த திரைப்படங்கள் பின்னாளில் எண்முறைமைப்படுத்தப்பட்ட Digital Versatile Disk (DVD) வடிவில் வெளியானது. ஆனால் இன்று இது எல்லாவற்றையும் கடந்து நான் முன்சொன்ன அபரிமிதமான தொழில்நுட்ப வசதிகள் உட்பொதியப்பட்டவையாக Blu-ray தட்டுக்களில் வெளிவருகின்றன. இது இவ்வாறிருக்க கணினியில் இவ்வாறான அதிஉயர் தொழில்நுட்பம் வாய்ந்த திரைப்படங்களை அதே தரத்தில் இணையமூடாகவோ அல்லது சாதாரணமாகவோ பரிமாறிக் கொள்வதற்கென அமைந்திருக்கின்ற ஒரு கோப்பு வடிவம்தான் MKV. 

பொதுவாக கணினியில் அல்லது இணையத்திலிருந்து இந்த Blu-ray வடிவ திரைப்படங்களை தரவிறக்கம் அல்லது பகிரும் (Sharing) போது இந்த Format  பயன்படுத்தப்படும், வழமையாக கணினிகளில் இவ்வாறான படங்களை பார்ப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அதே போல அந்தவகை கோப்புக்களை (Files) திறந்து வாசிக்க (Read) விஷேட வகை மென்பொருட்கள் தேவைப்படும். ஆனால் நம்மில் பலர் இவ்வாறான திரைப்படங்களை இணையத்திலிருந்து அல்லது நண்பர்களிடமிருந்து பெற்று பயன்படுத்தும் போது அதனை கணினியில் மட்டுமே பார்க்க முடிவதுடன் அதை ஒரு DVD அல்லது VCD ஒன்றில் பதிந்து CD Player களில் பார்வையிட முடியாது. அதையும் தாண்டி அவ்வாறான MKV கோப்புக்களின் வடிவத்தை MPEG க்கு மாற்றி குறுந்தட்டுக்களில் (CD) பதிந்து Player களில் பயன்படுத்தினாலும் அந்த கோப்பின் தரம் குறைவடைந்து மங்கலான நிலையிலேயே அது தென்படும். இதே பிரச்சினை உங்களுக்கும் இருந்தால் உங்களுக்கு உதவுவதற்கென்றே இரண்டு இலவச மென்பொருட்கள் இருக்கின்றன. இதன் மூலம் நீங்கள் உங்கள் MKV கோப்புக்களை அதே தரத்தில் குறுந்தட்டில் பதிந்து தொலைக்காட்சியிலும் காணலாம்.  

#1 DVD Flick

இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமானதும் ஒரு திறந்த வள (Open Source) மென்பொருளாகும். இது ஏனைய பணம் செலுத்தி பெறுகின்ற மென்பொருள்களை விட சாதாரணமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் மிகவும் வினைத்திறனாக தொழிற்படக்கூடியது. உங்கள் கணினியில் MKV கோப்புக்கள் இருந்தால் அவற்றை இதில் முதலில் Import செய்ய வேண்டும்.
பின்னர் உங்கள் தேவைக்கேற்ப உங்கள் DVD எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வடிவமைத்து பின்னர் அதை DVDயில் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெறும் MKV கோப்புக்கள் மட்டுமல்லாமல் பின்வருமாறும் கோப்புக்களை மாற்றம் செய்யலாம். AVI to DVD, FLV to DVD, HDMOV to DVD, MKV to DVD, MJPG to DVD, MPG to DVD, M2V to DVD, MP4 to DVD, M4V to DVD, NSV to DVD, NUT to DVD, QT to DVD, MOV to DVD, RM to DVD, SMK to DVD, OGM to DVD, WMV to DVD, ASF to DVD, 3GP to DVD, 3G2 to DVD. அதுமட்டுமல்லாது DVD Flick மென்பொருளானது உங்கள் கோப்புக்களை ISO Image File வடிவிற்கும் மாற்றி தருகிறது. 

இவை தவிர இந்த மென்பொருள் தருகின்ற மேலதிக நன்மைகள்
* எந்தவொரு வகை கோப்பையும் DVD வடிவிற்கு மாற்றும் வசதி
* 45க்கும் மேற்பட்ட வீடியோ Codec களை ஆதரிக்கிறது
* 60க்கும் மேற்பட்ட Audio codec பயன்பாடு
* உங்கள் DVDயின் Menu தோற்றத்தை இதிலிருந்தே Design செய்யலாம்.
முழுவதும் இலவசமாக கிடைப்பதுடன் Adware, Spyware தொல்லைகள்  இல்லை


#2 E.M.Free MKV Video2Dvd V3.10

இதுவும் MKV வகையிலமைந்த கோப்புக்களை DVD வடிவத்திற்கு மாற்றித்தரும் ஒரு இலவச (Freeware) மென்பொருள்தான். இதிலுள்ள விஷேட அம்சம் Drag and Drop முறை மூலம் உங்களின் வேலைகளை செய்து கொள்ள முடிவதாகும். இலகுவாக உங்கள் Output இனது அமைப்புக்களை (Settings) மாற்றியமைக்ககூடியதாக அமைந்துள்ளது.
விஷேடமாக இதிலுள்ள Easy Mode மூலமாக நீங்கள் வேறு அதிகமான எந்தவொரு மாறற்ங்களையும் தேர்வு செய்யாமல் வெறும் ஒரு கிளிக் இல் உங்கள் கோப்பை மாற்றலாம். அம் மென்பொருள் தானாகவே உங்கள் கோப்புக்கு (File) ஏற்ப ஏனைய விடயங்களை மாற்றியமைத்து கொள்ளும். பாவனைக்கு இலகுவான பயனர் இடைமுகத்தை (User Interface) கொண்ட இந்த மென்பொருள்

மேலதிகமாக உங்களுக்கு தரும் வசதிகள்
* HD-DV, Blu-ray TS, TP, M2TS, AVCHD, WMV-HD போன்ற உயர்தரமான காணொளி (Video) வகை கோப்புக்களை கூட இலகுவாகவும் விரைவாகவும் DVDயாக மாற்றிவிடும்.
* .srt .sub .ssa .ass .smi .psb .tex .idx போன்ற உபதலைப்புக்களுக்கான (Subtitles) கோப்புக்களையும் ஆதரிக்க கூடியது.
* YouTube போன்ற இணையத்தளங்களிலிருந்து நீங்கள் தரவிறக்கம் (Downlaod) செய்யும் File களைக்கூட இது மாற்றீடு (Convert) செய்யக் கூடியது.


நான் இங்கே குறிப்பிட்டது தவிர்ந்த இன்னும் பல நன்மைகளை இந்த இரண்டு இலவச மென்பொருள்களும் தருகின்றன. ஆனாலும் முக்கிய வசதிகளை தந்திருக்கிறேன். உங்களுக்கு பொருத்தமான மென்பொருளை நான் தந்திருக்கின்ற இணைப்பில் இருந்து தரவிறக்கி பயன்படுத்துங்கள். வழமைபோல தரவிறக்கின்ற திரைப்படங்களை இனி தொலைக்காட்சி, ஏனைய சாதனங்களிலும் காணலாம். அனுபவங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொள்ளுங்கள்.


-ஷான்


Share With your friends