12 அக்டோபர், 2013

மடிக்கணினி (Laptop) பயன்படுத்துபவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சுலபமான 8 பராமரிப்பு வழிமுறைகள்



நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் கணினிகள் என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத சாதனமாக மாறிவிட்டது. ஆனாலும் இன்றைய நாட்களில் மேசைக்கணினிகளை (Desktop Computers) விட மடிக்கணினிகள் (Laptop) தருகின்ற அதிகமான வசதிகளாலும் பாவனைக்கு இலகுவாக அமைவதனாலும் இப்போது பெரும்பாலான வகை மடிக்கணினிகளை மேசைக்கணினிகளின் விலையிலேயே கொள்வனவு செய்ய முடிவதும் அனைவரினதும் மோகமும் மடிக்கணினிகள் நோக்கி திருப்பியிருக்கிறது. இதனால் இப்போதெல்லாம் வீட்டுக்கொரு மடிக்கணினி என்ற நிலை தோன்றியிருக்கிறது. ஒப்பீட்டளவில் மேசைக்கணினிகளை விட மடிக்கணினிகள் பல வசதிகளையும் பாவனைக்கு இலகுவாகவும் அமைந்தாலும் ஒரு மடிக்கணினியை நீண்டகாலம் ஒழுங்காக பாவிப்பதற்க்கும், அது சிக்கலின்றி இயங்குவதற்கும் அவற்றை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.

ஆனாலும் அவையும் சாதாரண ஒரு கணினி செய்கின்ற வேலையைதானே செய்கின்றன அவற்றை ஏன் விஷேடமாக பாரமரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்? அல்லது வெறுமனே தூசு தட்டினால் போதமானது என்று சிலர் நினைக்கலாம் ஆனால் தூசு தட்டுவது மட்டும் ஒரு மடிக்கணினிக்கு பாதுகாப்பை ஏற்படுத்தாது. வன்பொருள் ரீதியாகவும் மென்பொருள் ரீதியாகவும் அவை பாரமரிக்கப்படும் போது மாத்திரமே மடிக்கணினிகள் சிறப்பாக இயங்கும். அவ்வாறு நீங்களும் உங்களுக்கென்று ஒரு மடிக்கணினியை உபயோகிப்பவராக இருந்தால் உங்களுக்கு பயன்படக்கூடிய சில பராமரிப்பு முறைகளை தொகுத்து தருகின்றேன். அவற்றை பின்பற்றி உங்கள் மடிக்கணினிகளின் பாவனையையும் செயல்பாட்டையும் வினைத்திறனாக்குங்கள். 





#1 தூசுகளிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். (Watch out for dust)

எமது சாதாரண மேசைக்கணினிகள் போன்றே மடிக்கணினிகளிலும் வெப்பம் மற்றும் தூசு போன்றவற்றை வெளியேற்றுவதற்கான Processor Fan மற்றும் அதற்கான துவாரங்களும் காணப்படும். மடிக்கணினிகள் தொடர்ந்து பாவிக்கப்பட்டாலும் இந்த துவாரங்களை நாம் கவனிப்பதில்லை, இதனால் ஏனைய பாகங்களை விட இந்த துவாரங்கள் அமைந்துள்ள பகுதிகள் மட்டும் தூசி படிந்து காணப்படும். இந்நிலை நீடிக்குமானால் காலப்போக்கில் அந்த துவாரங்கள் அடைக்கபட்டு CPU Fan இனால் ஒழுங்காக வெப்பத்தை/தூசிகளை வெளியேற்ற முடியாமல் போவதுடன் அது அதிக வெப்பமான (Over heating) நிலையை தோற்றுவிக்கும். இதனால் உங்கள் மடிக்கணினி மட்டுமல்ல உங்கள் உடலுக்கும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம், எனவே உங்கள் மடிகணினிகளின் வன்பொருள் பாகங்களை வாரமொரு முறை சுத்தம் செய்யுங்கள்.

#2 குளிர்மையாக வைத்திருங்கள் (Keep it cool)

நீங்கள் அதிகமான நேரம் தொடர்ந்தும் மடிக்கணினியை பாவிப்பவராக இருந்தால் மின்விசிறியின் (Fan) அருகிலோ அல்லது குளிரூட்டி பொருத்தப்பட்ட இடத்திலோ நீங்கள் இருந்து உங்கள் மடிக்கணினியை பயன்படுத்துவதுடன் நேரடியான உங்கள் மடியில் வைத்து அதிகநேரம் மடிக்கணினிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் அவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாத போது Lap tray பயன்படுத்துங்கள் அல்லது Cushion போன்ற அமைப்புக்கள் மீது வைத்து பயன்படுத்துங்கள்.

#3 சிறந்த வைரஸ் தடுப்பு மென்பொருளை பாவியுங்கள். (Install a firewall and antivirus software)

உங்கள் கணினியின் இயங்கு முறைமையானது (Operating System) நச்சுநிரல் (Virus) பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும். அதிலும் இணையப் பயன்பாடு கொண்ட மடிக்கணினியாக இருந்தால் இந்த ஏற்பாடு அவசியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் Apple இன் Mac வகை மடிக்கணினிகளையோ அல்லது Ubuntu போன்ற இயங்குதளங்களை பயன்படுத்தினால் இந்த கவலையில்லை. ஆனால் Microsoft இனது எந்தவொரு பதிப்பை (Xp, Vista, 7, 8) பயன்படுத்தினாலும் நிச்சயம் வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவ வேண்டும். சில மடிக்கணினி வகைகளோடு Original Windows Genuine Windows தொகுப்பு வழங்கப்படும் அவ்வாறான கணினி கொண்டவர்கள் Microsoft இலவசமாக தருகின்ற Security Essentials மென்பொருளை பயன்படுத்தலாம் அதையே Microsoft பரிந்துரைக்கிறது. அவ்வாறில்லாமல் Pirated Version பயன்படுத்துபவர்கள் ஏதேனும் நல்ல Antivirus (Bit defender, Kaspersky, Avast, AVG, etc...) மென்பொருளை நிறுவுவது சிறந்தது.

#4 தேவையில்லாத மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் (Eliminate unused programs)

நீங்கள் பயன்படுத்துகின்ற மடிக்கணினியை நீங்கள் அதிகமாக எந்த தேவைக்காக பயன்படுத்துகிறீர்கள் மற்றும் உங்களுக்கு அவசியம் தேவைப்படுகின்ற மென்பொருள்களை மட்டுமே மடிக்கணினிகளில் நிறுவுங்கள், தேவையற்ற செயலிகளை (Program) நிறுவுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் மடிக்கணினியின் செயற்பாட்டு வேகம் அதிகரிக்கப்படுவதுடன் மடிக்கணினியின் சீரான மற்றும் நெடுநாள் பாவனைக்கும் வழிவகுக்கும். மேலும் தேவையற்ற மென்பொருட்களை தவிர்ப்பது உங்கள் வன்தட்டின் (Hard disk) சேமிப்பளவினையும் (Storage space) அதிகரிக்கும் இதனால் முக்கியமான தரவுகளை அவசர வேளைகளில் சேமிக்கவும் முடியும்.

#5 உங்கள் தகவல்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள் (Defragment hard drives)

சாதாரணமாக எந்தவிதமான கணினியை பயன்படுத்துபவர்களும் அறிந்திருக்கின்ற விஷயம் என்று நினைக்கின்றேன். கணினியை பாராமரிக்கின்ற வழிகளில் மிக முக்கியமானது. காரணம் நீங்கள் அதிகளவு மென்பொருட்களையும் கோப்புக்களையும் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணினி ஒழுங்காக இயங்குவதற்கும் கணினியின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். வன்தட்டில் அதிகளவு தரவுகள் பதியப்படுகின்ற போது அவை குறித்த ஒழுங்கில் சீராக அடுத்தடுத்து எப்போதும் பதியப்படுவதில்லை, இதனால் இடப்பற்றாகக்குறை, நீங்கள் தரவுகளை மீளப்பெற முயற்சிக்கின்ற போது அதற்க்கு அதிகளவு நேர விரயம் போன்ற பல சிக்கல்களும் தோன்றும், இதனை தவிர்க்க வன்தட்டில் குழம்பிக்கிடக்கின்ற தரவுகளை வரிசையாக அடுக்கி சீர்படுத்துகின்ற செயன்முறைதான் Defragment என்று சொல்லப்படுகின்றது. இதனை குறைந்தது வாரத்தில் ஒருமுறையாவது செய்வது சிறந்தது. Start->Allprograms->Accessories->System Tools->Disk defragment சென்று உங்கள் மடிக்கணினியையும் ஒழுங்குபடுத்தலாம்.

#6 பதிவுகளை தெளிவுபடுத்துங்கள் (Clean your registry)

உங்கள் கணினியில் நீங்கள் எந்தவொரு மென்பொருளையும், கோப்புக்களையும் (Files) பயன்படுத்தும் போதோ அல்லது நிறுவும் போதோ உங்கள் கணினி அநைத செயல்பாடு ஒவ்வொன்றுக்குமான பதிவுகளை தன்னுள் சேமத்து (Registry) கொள்கிறது. இவை சீராக எந்தவித பிரச்சினைகளுமின்றி (Corrupt) இருக்கின்றபோது மட்டுமே கணினியானது சீராக இயங்கும். இந்த Registry Cleaner இல் ஏற்படும் பிரச்சினைகள் நேரடியாக வெளிக்காட்டப்படுவதில்லைஇவை மறைமுகமான பாதக விளைவுகளையே ஏற்படுத்தும், அதே போல அந்த பிரச்சினைகளை நேரடியாக சரிசெய்வது சிரமம் இதனால் இதற்கென்று சில Registry Cleaner மென்பொருட்கள் இருக்கின்றன. சிறந்த ஒரு மென்பொருளை நிறுவி உங்கள் கணினியின் Registryயை சோதித்து கொள்ளுங்கள்.

#7 தற்காலிக கோப்புக்களை நீக்கிவிடுங்கள் (Delete temporary internet files)

நீங்கள் இணையப்பக்கங்களில் உலாவருகின்ற போது உங்கள் உலாவிகளால் உங்கள் கணினிகளில் சேமிக்கப்படுகின்ற கோப்புக்கள் மற்றும் சில மென்பொருள்களால் தானாகவே உருவாக்கப்படுகின்ற கோப்புக்களே Temporary Files எனப்படுகின்றன. இவற்றை கிரமமாக (Regular) நீக்குவதன் மூலம் உங்கள் மடிக்கணினியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். Run இல் சென்று %Temp% என தட்டச்சு செய்து Ok அழுத்த கிடைக்கின்ற சாளரத்தில் (Window) உள்ள அனைத்து  கோப்புக்களையும் தெரிவு செய்து அழித்து விடுங்கள். ஓரிரண்டு கோப்புக்களை அழிக்க முடியாது, காரணம் அவை உங்கள் இயங்குமுறைமைக்கான கோப்புக்கள்.

#8 மின்கலங்களை பராமரியுங்கள். (Power surge protection)

மடிக்கணினிகளை பொறுத்தவரையில் அதனுடைய மின்கலங்கள் (Battery) மிக முக்கியமானவை. உங்கள் மடிக்கணினியின் மின்கலத்தை சிறப்பாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை கைக்கொள்ளுங்கள்.

  • எப்போதும் over charging செய்யாதீர்கள். Battery charge ஆனவுடன் மின் இணைப்பை துண்டியுங்கள்.
  • மடிக்கணினியை பாவிக்காத வேளைகளில் முக்கியமாக இரவுப் பொழுதுகளில் Charge இல்   வைத்துவிடாதீர்கள். மின்னோட்டத்தில் அதிகரிப்பு/குறைவு அடிக்கடி ஏற்படுவதால் அது batteryயை பாதிக்க கூடும்.
  • முடியுமானவரை Battery யை முழுமையாக பாவியுங்கள். Battery Low செய்தி கிடைத்த பின்னரே Charge செய்யுங்கள். ஆனால் முக்கியமான நேரங்களில் இது அவசியமில்லை.

நான் மேற்சொன்ன இந்த 8 வழிமுறைகளையும் தொடர்ந்து கைக்கொள்வதன் மூலம் உங்கள் மடிக்கணினியையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் எந்தவொரு செய்முறையும் கட்டாயமானது இல்லை. ஆனால் பொதுவாக ஒரு கணினி சீராக இயங்க இவற்றை கைக்கொள்ள வேண்டும். கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 -ஷான்

கருத்துகள் இல்லை:

Share With your friends