6 ஏப்ரல், 2010

தகவல்களின் மொத்த திரட்டு விக்கிபீடியா (கவர் ஸ்டோரி)


இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக காணப்படுவது விக்கிபீடியா.ஆனால் இந்த விக்கிபீடியா என்றால் என்ன?இது என்ன செய்கிறது?இதன் வரலாறு என்ன? என்பது போன்ற பல விடயங்கள் பலருக்கு தெரியாத விடயமாக காணப்படுகிறது.எனவே முழுமையான ஒரு விக்கிபீடியா பற்றிய விடயங்களை எனது தேடலுக்கு அகப்பட்ட வகையில் ஒரு கட்டுரையாக தொகுத்து இம்மாதத்திற்கான கவர்ஸ்டோரியாக தருகிறேன்.

தகவல்களை சீராக ஒழுங்கமைத்தபடி கொண்ட பெரும்பாலும் எல்லா விடயங்களைப் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கிய நுாலை கலைக்களஞ்சியம் (Encyclopedia) என்று சொல்வோம்.Encyclopedia என்றால் எம் எண்ணத்திற்கு வருவது மைக்ரோசாப்டின் Encarta encyclopedia மற்றும் Britania encyclopedia போன்றவைகள் தான். ஆனாலும் இன்றைய நிலையில் மேற்சொன்ன Encyclopedia யாவற்றையும் தோற்கடித்து தகவல்களின் மொத்த திரட்டாக Wikipedia எனும் கட்டற்ற கலைக்களஞ்சியம் உருவெடுத்துள்ளது.

Wikipedia-ஓர் அறிமுகம்


ஹவாய் மொழியில் விக்கிவிக்கி என்றால் விரைவு என்று பொருள் இணையத்தளங்களைப் பார்வையிடும் எந்தவொரு விருந்தாளியும் தொகுக்ககூடிய வகையில் அமைந்த இணையத்தளங்களே இணையப்பரப்பில் விக்கி என அழைக்ப்படும்.இவ்வாறான விக்கி வகை இணையத்தளங்களை பராமரித்து முகாமைசெய்வதற்கு Wiki engines எனப்படும். மென்பொருள்கள் பயன்படுகின்றன.இதற்குப் பெரும்பாலும் Open source வகை மென்பொருள்கள் பயன்படுகின்றன. MediaWiki எனும் Open source வகையைச் சார்ந்த மென்பொருள் மூலமே Wikipedia பராமரிக்கப்படுகிறது.எவராலும் தொகுக்ககூடிய வகையிலமைந்த கலைக்களஞ்சியம் என்பதால் இதற்கு Wikipedia என்பதே பொருத்தமான பெயராகும்.   

Wikipedia-உருவான நிஐம்


2000ஆம் ஆண்டில் ஜிம்மி வேல்ஸ் (Jimmy wales) என்பவரும் அவரது சகபாடிகள் சிலரும் இணைந்து Nupedia எனும் இணைய அடிப்படையான கலைக்களஞ்சியமொன்றை ஆரம்பித்தனர்.இதில்,தகைமை வாய்ந்தவர்களிடமிருந்தே ஆக்கங்ங்கள் பெறப்பட்டு வெளியிடப்பட்டன.இதனால் Jimmy wales எண்ணியது போல Nupedia வின் வளர்சி அமையவில்லை.இதனால் அவர் தனது சகபாடிகளுடன் இணைந்து Encyclopediaஐ வளர்ச்சியடைய செய்ய என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென தீவிரமாக ஆலோசித்தனர். அதன்போதே Wiki தொடர்பான எண்ணக்கருவினை அறிந்து அதன்படி Nupedia ஐ Wiki வகையான கலைக்களஞ்சியமாக மாற்றத்தீர்மானித்தனர். 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி Nupedia வானது Wikipedia என பெயர்மாற்றப்பட்டு இணையத்திற்கு வந்தது.அன்று முதல் தகவல்களின் திரட்டுகை ஆரம்பமாயிற்று.அதனாலோ என்னவோ ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15ம் திகதியை விக்கிபீடியா தினம் (Wikipedia day) என சிலபயனர்கள் நினைவுபடுத்திக் கொண்டாடுகிறார்கள்.

Wikipedia-வளர்சிப்படி


ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் (http://en.wikipedia.org) மட்டும் காணப்பட்ட விக்கிப்பீடியா பின்னர் நுாற்றுக்கதிகமான வெளிநாட்டு மொழிகளில் முக்கியமாக நமது தமிழ் மெழியிலும் தகவல்கள் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது.மொத்த விக்கிப்பீடியாவில் இலக்கியம்,பண்பாடு,வரலாறு,அறிவியல்,கணிதம்,புவியியல்,சமூகம் மற்றும் தொழில்நுட்பம் என பல தொகுதிகளுக்கும் அடங்கும் 3,800,000 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் காணப்படுகின்றன.அத்தோடு ஒவ்வொரு நாளும் விக்கிபீடியாவின் பிரதான பக்கத்தில் (Main page) சிறப்புக் கட்டுரை,கூ்ட்டு முயற்சி கட்டுரை,உங்களுக்கு தெரியுமா?,மற்றும் வரலாற்றில் இன்று என ஏகப்பட்ட விடயங்கள் சார்பான தகவல்கள் புதிது புதிதாக காட்சியளிக்கும்.இவை யாவும்

உலகின் பல பாகங்களிலுமிருந்தும் இணையத்துடன் இணைந்து தங்களறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்த ஆயிரக்கணக்கான பயனர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையாலே சாத்தியமாகியுள்ளது.அத்தோடு விக்கிபூடியாவிலுள்ள சகல ஆக்கங்களும் GNU Free documentation licence (GFDL) இற்கு இணங்கவே வழங்கப்படுவதால் இங்குள்ள தகவல்களை எவரும் இலவசமாகவே தமது தேவைகளுக்காகப் பாவிக்க முடியும்.

Wikipedia-ஏனைய முயற்சிகள்


விக்கிபீடியாவின் துரிதமான வளர்ச்சியின் காரணமாக தகவல்களைப் பெறும் மூலங்கள் இலகுவாக்கப்பட்டுள்ளதோடு தகவல்களின் சுதந்திரமும் பேணப்படுகிறது.விக்கிபூடியாவானது,இன்னும் பல காத்திரமான தவல் கோட்டைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை சொல்லாமலும் இருக்கமுடியாது.அவற்றுள் பின்வருவனவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம். விக்சனரி (Wiktionary) எனப்படும் அகராதி,விக்கிநுால்கள் (Wikibooks) எனப்படும் கட்டற்ற நுால்கள் மற்றும் கையேடுகளின் தொகுப்பு,விக்கி மேற்கோள்கள் (Wikiquote) எனும் மேற்கோள்களின் தொகுப்பு,விக்கி மூலம் (Wikisource) எனும் இலவச மூலஆவணங்களின் தொகுப்பு,விக்கி இனங்கள் (Wiki species) எனும் இனங்களின் கோவை,விக்கி பொது 
(Wiki-commons) எனும் பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு என விக்கிப்பீடியாவின் சேவைத் தொகுதிகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.இந்தச் செயற்றிட்டங்கள் யாவும் வெகு சீக்கிரமாக தகவல்களால் போஷிக்கப்பட்டு வருவது எதிர்கால சந்ததிகளின் தகவல் தாகத்திற்கு பெருந்துணையாக அமையும்.


இனி நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி விக்கிப்பீடியாவை நமது தாய்மொழியில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.எனவே தமிழ் விக்கிப்பீடியாவை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.இது உங்களுக்கும் உறுதுணையாக இருக்கும்

Wikipedia-தேமதுரத் தமிழில்



தமிழ் மொழியிலமைந்த கட்டற்ற கலைக்களஞ்சியம் தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) முயற்சி 2003 இல் ஆரம்பமானது.இதில்,ஆங்கில மொழியிலமைந்த விக்கிப்பீடியாவைப்போல தகவல் செறிவு இல்லாவிடினும் இதுவரை 3000 க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.நீங்கள் இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போதே 
கட்டுரைகளின் எண்ணிக்கை மாறியிருக்ககூடும்.தமிழில் அமைந்த விக்கிப்பீடியாவிற்கு தாங்களறிந்த மற்றவர் அறிவதால் பயன் ஏற்படுமென எண்ணுகிற தகவல்களை எவரும் விக்கிப்பீடியாவில் சேர்க்க முடியும்.இந்த விக்கிப்பீடியாவில் வேண்டப்படுகின்ற கட்டுரைகள் மற்றும் படங்கள் பற்றிய விபரமும் காணப்படுவதால் அவற்றை வாசித்தறிந்து இந்த 
தகவல் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள 'தொகு' எனப்படும் Hyperlink ஐ கிளிக் செய்வதன் மூலம் தகவல்களை அளிக்க முடியும்.தகவல்களை வழங்குவது தொடர்பாக பயிற்சி பெறுவதற்கு விக்கி மணல்தொட்டி (Wiki sand box) எனும் வசதியும் காணப்படுகிறது.தமிழ் மொழியிலமைந்த விக்கிப்பீடியாவிலும் ஏனைய முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றுள் விக்கிநூல்கள் மற்றும் விக்கிமேற்கோள்கள் ஆகிய முயற்சிகள் குறிப்பிடத்தக்களவு முன்னேறியுள்ளதை சுட்டிக்காட்டலாம்.தமிழ் விக்கிப்பீடியாவும் தகவல்களின் மொத்த திரட்டாக உருவெடுககும் காலம் வெகுதொலைவில் இல்லையென எண்ணத் தோன்றுகிறது.


Wikipedia-தகவல்களை நம்பலாமா?


எவராலும் தொகுக்கப்படக்கூடிய வகையிலமைந்துள்ள விக்கிப்பீடியாவிலே காணப்படுகின்ற தகவல்கள் உண்மையானதாக இருக்குமா?என்ற கேள்வி எம்எல்லோருக்கும் வெளிப்படையாக உண்டாகும்.யாரேனும் ஒருவர்,அறியாமலோ,அன்றி வேண்டுமென்றோ தவறான தகவல்களை வழங்க முடியுமல்லவா?என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஆனால் ஒருவரால் பிழையான தகவல்கள் வழங்கப்பட்டாலும் அவை இன்னொருவரால் திருத்தப்படும் நிகழ்தகவு இதில் அதிகமென்றே நம்பப்படுகின்றது.ஆனாலும் இது பரந்து விரிந்து காணப்படும் எல்லாத் தகவல்களும் சாத்தியமாகுமா?இதனை ஆராய்ந்தறிய உலகிலே மிகவும் பிரசித்தமான பிரித்தானியாவின் Nature எனும் விஞ்ஞான சஞ்சிகை முற்பட்டது.இது தொடர்பாக தமது அறிக்கையை கடந்த வருட இறுதிப்பகுதியில் அது வெளியிடப்பட்டது.அதில் விஞ்ஞானம் சார்பாக விக்கிப்பீடியாவில் காணப்படும் தகவல்கள்,கட்டுரைகள்,மற்றும் படிமங்கள் (Images) யாவும் உலகப் பிரசித்தி பெற்ற Encyclopedia Britannica இலுள்ள தகவல்களைப் போல உண்மையானவையாகுமென குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே விக்கிப்பீடியாவானது தகவல்களின் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பேணும் சிறப்பானதொரு ஊடகம் என்று நம்பலாம்.

Wikipedia-எதிர்காலம் பலமானது


உலகின் நாலா பக்கங்களிலுமுள்ள பங்களிப்பாளர்களின் பங்களிப்பின் விளைவாக சேர்க்கப்படும் ஆக்கங்கள் உலகின் பல பாகங்களிலுமுள்ள சுமார் 100இற்கும் அதிகமான சேவையகங்களில் சேமிக்கப்பட்டு விக்கிப்பீடியா இணையத்தளமூடாக காட்சிப்படுத்தப்படுகின்றன.தகவல்களின் அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக Serverகளில் சேமிக்கப்பட்டு இணையத்தில் இது பரப்பப்படலாம்.இதனால் விக்கிப்பீடியாவானது தகவல்களின் மொத்தத்திரட்டாக உருவெடுக்கும் நிலையை எவராலும் தடுக்கமுடியாது. அகிலத்திலேயே அனைத்துத் தகவல்களையும் தெளிவாக,விரிவாக கொண்ட ஒரேயொரு கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா எதிர்காலத்தில் உணரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஆக்கபூர்வமான முயற்சியை வாழ்த்துவோம்!எம்மால் முடிந்தளவுக்கு நாமும் பங்களிப்போம்.

கருத்துகள் இல்லை:

Share With your friends